இங்கு எரிக்கப்படுவது பிணம் அல்ல : ரூ.850 கோடி மதிப்புள்ள 200 டன் கஞ்சாவை அழித்த போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2022, 5:18 pm
Kanja Destroy - Updatenews360
Quick Share

ஆந்திரா : ஆபரேஷன் பரிவர்த்தனா மூலம் 850 கோடி ரூபாய் மதிப்புள்ள 200 டன் கஞ்சா பயிர்களுக்கு தீ வைத்து அழித்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 11 மண்டலங்கள் மற்றும் ஒடிசாவில் உள்ள 23 மாவட்டங்கள் ஆகியவற்றில் பெருமளவில் கஞ்சா சாகுபடி விவசாயம் போல் நடைபெற்று வருகிறது.

நக்சலைட்டுகள் நடமாட்டம் மிகுந்த மலைப்பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் கஞ்சா சாகுபடி நடைபெறுவதால் அந்த பகுதிகளுக்கு போலீசார் சென்று கஞ்சா பயிரிடும் நபர்களை கைது செய்வது, கஞ்சா தோட்டங்களை அளிப்பது ஆகிய நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட இயலாத நிலை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் இரண்டு மாநிலங்களிலிருந்தும் நாடு முழுவதும் கஞ்சா விற்பனை நடைபெறுவதால் அவற்றை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று மற்ற மாநிலங்கள் ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளன.

எனவே ஆந்திர மாநில போலீசார் ஆபரேஷன் பரிவர்த்தனா என்ற பெயரில் கடந்த ஓராண்டில் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 7 ஆயிரத்து 552 ஏக்கர் கஞ்சா தோட்டங்களை அழித்தனர். இதற்காக கஞ்சா பயிரிடப்பட்டுள்ள இடங்களை கண்டுபிடிக்க டுரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் கஞ்சா பயிர் செய்து அவற்றை கடத்தியது ஆகிய குற்றங்களுக்காக 1500 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தவிர கடத்தலின் போது 200 டன் எடையும் சுமார் 850 கோடி ரூபாய் மதிப்பும் கொண்ட கஞ்சாவை கைப்பற்றிய ஆந்திர போலீசார் அவற்றை விசாகப்பட்டினம் அருகே உள்ள கோடூரூ மைதானம் ஒன்றில் தீ வைத்து எரித்தனர்.

ஆந்திர மாநில டிஜிபி கௌதம் சவாங் 200 டன் கஞ்சாவுக்கு தீ வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கஞ்சா பயிரிடுவதை தவிர்க்குமாறு விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மலைவாழ் மக்களுக்கு பல்வேறு முறை வேண்டுகோள் விடுத்து இருக்கிறோம்.

ஆனாலும் கஞ்சா பயிர் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கஞ்சா பயிர் செய்பவர்கள், அவற்றை கடத்துபவர்கள் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Views: - 958

0

0