கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு சென்றதற்கு பாராட்டு..! மோடியின் ஆதரவாளராக மாறிய காங்கிரஸ் தலைவர்..?
30 November 2020, 1:02 pmபிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியை சோதித்து வரும் நிறுவனங்களுக்கு செல்வது இந்திய விஞ்ஞானிகளை அங்கீகரிப்பதாகவும், பல ஆண்டுகளாக இந்தியா கட்டமைத்துள்ள நிறுவனங்களுக்கான ஒப்புதல் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
விவசாயிகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தடுப்பூசி மையங்களுக்கான பயணம் தொடர்பாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவாலா கடுமையாக விமர்சனம் வைத்த ஒரு நாள் கழித்து ஆனந்த் சர்மாவின் கருத்துக்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி வரும் நிலையில், திறமையான மற்றும் வலுவான விநியோக முறை இருப்பதை உறுதி செய்யுமாறு ஆனந்த் சர்மா பிரதமரை வலியுறுத்தினார். மேலும் பிரதமரின் பயணம் முன்னணி கொரோனா களப் பணியாளர்களின் மன உறுதியை உயர்த்துவதோடு தேசத்திற்கு உறுதியளிக்கும் என்றும் வலியுறுத்தினார்.
“பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி சீரம் நிறுவனம், பாரத் பயோடெக், மற்றும் ஜைடஸ் காடிலா ஆகிய நிறுவனங்களுக்கு செல்வது இந்திய விஞ்ஞானிகளின் அங்கீகாரமாகவும், கொரோனாவுக்கான தடுப்பூசியை தயாரிப்பதற்கான அவர்களின் பணிக்கு உத்வேகம் அளிப்பதாகவும் இருந்தது. இது பல காலமாக இந்தியா கட்டமைத்துள்ள நிறுவனங்களை அங்கீகரித்து, நிபுணத்துவம் மற்றும் ஆற்றல் மூலம் இந்தியாவை உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக ஆக்குகிறது.” என்று அவர் வெளியிட்ட ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி செயல்முறைகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி சனிக்கிழமை அகமதாபாத், ஹைதராபாத் மற்றும் புனேவுக்கு சென்றார்.
அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் பயோடெக் பூங்கா, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மற்றும் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவற்றை பார்வையிட்டார்.
இந்நிலையில் காங்கிரசின் செயல்பாடுகள் குறித்து பல மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ள நிலையில், ஆனந்த் சர்மாவின் மோடி ஆதரவு கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள வேறுபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
0
0