தியாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாதது துரதிர்ஷ்டம்..! சௌரி சௌரா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் மோடி உரை..!

4 February 2021, 12:30 pm
Modi_UpdateNews360
Quick Share

இந்திய சுதந்திர போராட்டத்தின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சௌரி சௌரா சம்பவத்தின் நூற்றாண்டு நினைவு தின கொண்டாட்டங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பிரதமர் ஒரு அஞ்சல் தலையையும் வெளியிட்டார்.

சௌரி சௌரா சம்பவம் என்ன?

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக, 1922’ஆம் ஆண்டு நடந்த சௌரி சௌரா சம்பவம், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை குறிக்கிறது. 

நாடு முழுவதும் காந்தியடிகள் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் நடந்து வந்த நிலையில், போராடியவர்களை பிரிட்டிஷ் இந்தியா காவல்துறையினர் சுட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 1922 பிப்ரவரி 4’ஆம் தேதி, அப்போதைய ஐக்கிய மாகாணத்தின் (இப்போது உத்தரபிரதேசம்) கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சௌரி சௌரா காவல் நிலையத்திற்கு எதிர்ப்பாளர்கள் தீ வைத்து, அங்கு இருந்த 22 போலீஸ்காரர்களும் மூன்று சுதந்திர போராட்ட வீரர்களும் கொல்லப்பட்டனர்.

பிரிட்டிஷ் இந்தியா நிர்வாகத்தால் ஏராளமான சுதந்திர போராட்ட வீரர்கள் இதற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களில் பலர் தூக்கிலிடப்பட்டனர். மேலும் பலர் இந்த சம்பவத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவம் மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தையே நிறுத்த காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படும் இந்நிகழ்வு, அகிம்சை வழியில் போராடிய காங்கிரசால் வன்முறை சம்பவமாக கருதப்பட்டதால், இந்திய சுதந்திரத்திற்குப் பின்னும் இதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என பல்வேறு தரப்பிலும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசு மற்றும் உத்தரபிரதேச அரசுகள் இணைந்து சௌரி சௌராவின் நூற்றாண்டு நினைவை வெகு சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர்.

சௌரி சௌரா நூற்றாண்டு கொண்டாட்டம் :

இந்த நிகழ்வில் உத்தரபிரதேசம் ஒரு உலக சாதனையை உருவாக்க முயல்கிறது, அதன் அனைத்து மாவட்டங்களும் வந்தே மாதரம் பாட ஏற்பாடு செய்யப்பட்டது. சௌரி சௌரா சம்பவம் மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மக்கள் வந்தே மாதரத்தின் முதல் சரணத்தை வணக்க தோரணையில் பாடிய வீடியோ பதிவு செய்யப்படும்.

ஆண்டு முழுவதும் கொண்டாட்டங்களுக்காக கட்டுரை எழுதுதல், விவாதம், கவிதை பாராயணம், ஓவியம் மற்றும் பிற போட்டிகளும் பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், கண்காட்சிகள், புத்தகக் கண்காட்சிகள் மற்றும் பிற நிகழ்வுகளும் நடத்தப்படும்.

சுதந்திர போராட்டத்தின் போது பல ஹீரோக்கள் செய்த தியாகங்கள் குறித்து இளைய தலைமுறையினருக்கு உணர்த்துவதற்காக இந்த சம்பவம் உ.பி. பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டார்.

இது தவிர, கோரக்பூர் பிரிவில் உள்ள 400 அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளின் மாணவர்கள் சௌரி சௌரா கிளர்ச்சி மற்றும் தொடர்புடைய தளங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள். தனியார் பள்ளிகளும் உரிய நேரத்தில் இந்த சுற்றுப்பயணத்தில் சேர்க்கப்படும்.

இதற்கான தொடக்க விழா இன்று நடந்த நிலையில், பிரதமர் மோடி வீடியோ கான்பெரன்ஸ் முறையில் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது பின்வருமாறு :- “சௌரி சம்பவத்தின் தியாகிகள் குறித்தும் அவர்கள் எவ்வளவு பேர் என்பது குறித்தும் விவாதிக்கப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. இருப்பினும், வரலாற்றின் பக்கங்களில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றாலும், அவர்களின் இரத்தம் நாட்டின் மண்ணில் உள்ளது. அது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது.

இந்த சம்பவத்தின் செய்தி மிகப்பெரியதாக இருப்பதால், சௌரி சௌராவில் ஒரு காவல் நிலையத்திற்கு தீ வைக்கப்படுவதோடு மட்டுப்படுத்தப்படவில்லை. ஆனால் பல்வேறு காரணங்களால், இது ஒரு சிறிய சம்பவமாக கருதப்படுகிறது. நாம் அதை குறிப்பிட்ட அந்த சூழலில் பார்க்க வேண்டும். தீ காவல்நிலையத்தில் மட்டும் வைக்கபபடவில்லை, மக்களின் இதயத்திலும் தான் வைக்கப்பட்டது.”

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதற்கிடையே பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “உத்தரபிரதேச அரசு திட்டமிட்டுள்ள நூற்றாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் பிப்ரவரி 4 முதல் மாநிலத்தின் 75 மாவட்டங்களிலும் தொடங்கி 2022 பிப்ரவரி 4 வரை தொடரும்” என்று தெரிவித்துள்ளது.

Views: - 15

0

0