டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் மேலும் ஒருவருக்கு கொரோனா : கையை விரித்த மத்திய அரசு

14 February 2020, 6:56 pm
diamond ship - updatenews360
Quick Share

ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தள்ளது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பரவி வரும் கொரோனா வைரஸ், தற்போது சுமார் 1,500 பேரின் உயிர்களை குடித்துள்ளது. மேலும், பலரின் உயிர்களை எடுக்கவும் காத்திருக்கிறது. அதோடு, உலக நாடுகளையே மருத்துவக் கண்காணிப்புக் கீழ் கொண்டு வந்த இந்த வைரஸ் தொற்றினால், சர்வதேச மருத்துவ அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரசுக்கான மருந்தை இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், சீனா மற்றும் பிற நாடுகளில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுடன் வருபவர்களை, ஏற்றுக்கொள்ள அனைத்து நாடுகளும் தயக்கம் காட்டி வருகின்றன.

japan ship 1 - updatenews360

இந்த நிலையில், ஜப்பானின் கார்னிவல் என்னும் நிறுவனத்திற்கு சொந்தமான டயமண்ட் பிரின்சஸ் கப்பல், கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ஹாங்காங்கில் இருந்து புறப்பட்டு, 25-ம் தேதி ஜப்பானை நோக்கி வந்துள்ளது. சுமார் 3,500 பேர் பயணித்த இந்தக் கப்பலில், 80 வயதுள்ள ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்துள்ளது. தற்போது இந்த வைரஸ் நாளுக்கு நாள் பரவி, 174 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பயணித்து வரும் இந்தியர்களில் ஏற்கனவே 3 பேர் கொரோனா வைரசாஸ் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

எனவே, இந்தக் கப்பலில் இருக்கும் 138 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. மேலும், தங்களை காப்பாற்றுமாறும், டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த பினய் குமார் என்பவர் பிரதமர் மோடிக்கும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்தார். அதேபோல, மதுரையைச் சேர்ந்த அன்பழகன் என்பவரும் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில், சொகுசு கப்பலில் இருக்கும் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்றும், ஜப்பானுக்கான இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Harshavardhan - updatenews360

இதனிடையே, ஜப்பான் அரசின் விதிகளின்படியே கப்பலில் பயணம் செய்துள்ள மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார். மேலும், வைரஸ் பாதித்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்கள் பிப்.,19-ம் தேதி வரை தனிமையில் வைக்கப்படுவார்கள் என்றும், கப்பலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் இருக்கும் போது, எங்களின் நாட்டு மக்களை மட்டும் மீட்டுக் கொடுங்கள் எனக் கூற முடியாது, என்றார்.