உ.பி. சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு..! ஐக்கிய ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!

27 January 2021, 7:45 pm
Nitish_Kumar_UpdateNews360
Quick Share

2022 உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சி அமைப்பை வலுப்படுத்தும் பொறுப்பை ஐக்கிய ஜனதா தள தேசிய பொதுச் செயலாளர் கே.சி. தியாகியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தியாகி சமீபத்தில் இது தொடர்பாக கட்சி அலுவலக பொறுப்பாளர்களுடன் கூட்டங்களை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பேசிய ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் ஒருவர், “பீகாருக்கு வெளியே ஐக்கிய ஜனதா தளம் தனது கட்சியை விரிவுபடுத்த ஆர்வமாக உள்ளது. மேலும் கட்சி மற்ற மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்.” எனத் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான ஐக்கிய ஜனதா தளத்தின் முடிவு பாஜகவிற்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் ஐக்கிய ஜனதா தளம் ஓபிசியை மையமாகக் கொண்ட பிரச்சாரத்தைத் திட்டமிட்டுள்ளது. இது பாஜகவுக்கு நேரடியாக பலவீனத்தை ஏற்படுத்தும் முயற்சி எனக் கூறப்படுகிறது. 

“நிதீஷ் குமார் சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவினருக்கு பயனளிக்கும் கொள்கைகளுக்கு பெயர் பெற்றவர். நாங்கள் எங்கள் பிரச்சாரத்தில் இதையே அடிப்படையாகக் கொள்வோம். இது மற்ற கட்சிகளை காயப்படுத்தினால், நாங்கள் கவலைப்படவில்லை” என்று ஐக்கிய ஜனதா தளத் தலைவர்கள் கூறுகின்றனர்.

உத்தரபிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை உயர்த்த ஐக்கிய ஜனதா தளம் திட்டமிட்டுள்ளது.

“பீகாரில் ஒவ்வொரு கட்சியும் கார்பூரி தாகூரின் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றன. நாங்கள் இப்போது அதை உ.பி.க்கு எடுத்துச் சென்று கார்பூரி தாக்கூர் சூத்திரத்தின் அடிப்படையில் மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை எழுப்புவோம்.” என்று ஐக்கிய ஜனதா தளத் தலைவர் ஒருவர் கூறினார்.

உத்தரபிரதேசத்தில் கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.