சீன உளவாளிகளைக் கைது செய்தது டெல்லி போலீஸ்..! பத்திரிகையாளர் கைதான வழக்கில் புதிய திருப்பம்..!

19 September 2020, 3:47 pm
Journalist_Rajeev_Sharma_UpdateNews360
Quick Share

பாதுகாப்புத் துறையின் ரகசிய ஆவணங்களைக் கொண்டிருந்ததற்காக டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு சீனப் பெண்ணையும் நேபாள ஆணையும் கைது செய்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக செப்டம்பர் 14’ஆம் தேதி சர்மா கைது செய்யப்பட்டார். அவர் ரகசிய பாதுகாப்பு ஆவணங்களை வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

நேற்று இரவு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “ராஜீவ் சர்மா அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்ட வழக்கில் சிறப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பாதுகாப்பு தொடர்பான சில ரகசிய ஆவணங்களை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கின் விசாரணை நடந்து வருகிறது, மேலும் விவரங்கள் உரிய நேரத்தில் பகிரப்படும்.” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சர்மா செப்டம்பர் 15’ஆம் தேதி நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் 6 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார். அவர் ஜாமீன் மனுவையும் தாக்கல் செய்துள்ளார். இது செப்டம்பர் 22’ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.  

சீனாவுக்காக உளவு பார்த்ததற்காக பிதாம்புராவில் வசிக்கும் சர்மா கைது செய்யப்பட்டதை போலீசார் நேற்று இரவு உறுதிப்படுத்தினர். சர்மா மீது அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் (ஓஎஸ்ஏ) கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதே குற்றச்சாட்டில் சீன மற்றும் நேபாள நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று துணை போலீஸ் கமிஷனர் (சிறப்பு செல்) சஞ்சீவ் குமார் யாதவ் தெரிவித்தார்.

“சீன உளவுத் துறைக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதற்காக ஒரு ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளரான ராஜீவ் சர்மாவை டெல்லி சிறப்பு செல் கைது செய்துள்ளது. ஒரு சீனப் பெண்மணியும் அவரது நேபாள கூட்டாளியும் ஷெல் நிறுவனங்களின் மூலம் பெரும் தொகையை செலுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.

பத்திரிகையாளர் அனுப்பும் தகவலுக்கு ஈடாக சீன உளவுத்துறை அதிக அளவு பணத்தைக் கொடுத்துள்ளது. ஏராளமான மொபைல் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.” என சஞ்சீவ் குமார் யாதவ் தெரிவித்தார்.

Views: - 0

0

0