பாஜகவில் குடும்பத்தோடு ஐக்கியமாகும் கங்கனா..? சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்க பாஜக முடிவு..!

12 September 2020, 6:07 pm
Kangana_Ranaut_UpdateNews360 (2)
Quick Share

பாலிவுட் மாபியா குறித்து கருத்து கூறி, சிவசேனாவினரின் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வரும் கங்கனா ரனவத் குடும்பத்தோடு பாஜகவில் இணையவிருப்பதாகக் கூறப்படுகிறது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பான விவகாரத்தில் பாலிவுட் மாபியா குறித்து கருத்து கூறிய கங்கனா ரனவத்,  பின்னர் மும்பை காவல்துறையைக் குறிவைத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மும்பை உள்ளதாக கருத்துக் கூறினார்.

இதனால் சிவசேனா கட்சி கங்கனா ரனவத்துக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தது. சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் ஒரு படி மேலே போய் கங்கானாவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் மத்திய அரசு அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது.

உச்சகட்டமாக சிவசேனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மும்பை மாநகராட்சி அடாவடியாக கங்கானாவின் அலுவலகத்தை இடித்துத் தரைமட்டமாக்கியது. இதையடுத்து சிவசேனாவிற்கும் கங்கனாவிற்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.

காங்கிரஸ் பின்னணி கொண்ட கங்கனா குடும்பம் :

கங்கனாவின் குடும்பம் நீண்டகால காங்கிரஸ் பின்னணியைக் கொண்டது. சுதந்திர போராட்ட வீரரான கங்கனாவின் தாத்தா தொடர்ச்சியாக 15 ஆண்டு காலம் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தார்.

கேங்ஸ்டர் படம் வெளியான பிறகு காங்கிரஸ் தரப்பிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தனக்கு கட்சியில் சேரவும் தேர்தலில் சீட் தரவும் அழைப்பு வருவதாக கங்கனா தெரிவித்தார். மேலும் மணிகர்ணிகா படத்திற்கு பிறகு இந்த பட்டியலில் பாஜகவும் இணைந்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால் ஒவ்வொரு முறையும் தனக்கு வழங்கப்பட்ட அழைப்புகளை நிராகரித்த கங்கனா, அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என ஒவ்வொரு முறையும் தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்நிலையில், கங்கனா தனக்கு சிவசேனா கட்சி கொடுக்கும் குடைச்சல்களை எதிர்க்க, காங்கிரஸ் பின்னணியில் வந்த தனக்கு காங்கிரஸ் எந்தவித ஆதரவையும் தராததும், குறிப்பாக ஒரு பெண்ணுக்கு விளைவிக்கப்படும் அநீதியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாதது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மறைமுகமாக சாடியும் இருந்தார்.

பாஜகவில் இணையும் கங்கனா குடும்பம் :

கங்கானாவின் குடும்பம் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த நிலையிலும் கடந்த சில ஆண்டுகளாகவே கங்கனா மற்றும் அவரது சகோதரி மோடியின் மீது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தற்போது கங்கானாவுக்கு வந்த ஆபத்தை காங்கிரஸ் வேடிக்கை மட்டுமே பார்த்த நிலையில், மத்திய பாஜக அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பை வழங்கியிருப்பதை அடுத்து கங்கானாவின் தாய் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் நடந்து கொண்டுள்ள விதத்தால் அதிருப்தி அடைந்துள்ள கங்கனா குடும்பம், தற்போது பாஜகவில் நேரடியாக இணைய முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த முடிவை வரவேற்றுள்ள ஹிமாச்சல பிரதேச பாஜக தலைமை, கங்கனா குடும்பத்தோடு பாஜகவில் இணைந்தால், சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து இணைத்துக் கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

Views: - 0

0

0