கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம்: விடிய விடிய காத்திருந்து அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்…!!

Author: Aarthi Sivakumar
31 October 2021, 9:52 am
Quick Share

பெங்களூரு: கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கன்னட திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நேற்று முன்தினம் பெங்களூருவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது இந்த மரணம், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், கன்னட மக்களை சோக கடலில் ஆழ்த்தியுள்ளது.

Image

அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரை உலகையும் அவரது மரணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் கெலாட், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கன்னடம் உள்பட இந்திய திரை உலக நட்சத்திரங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

புனித் ராஜ்குமார் மரணம் அடைந்ததாக நேற்று முன்தினம் மதியம் 2.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விக்ரம் மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.

Image

அங்கு புனித் ராஜ்குமாரின் உடலை பார்த்து குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். சுமார் 4 மணி நேரம் அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் இரவு 7 மணியளவில் புனித் ராஜ்குமாரின் உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கன்டீரவா மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அவரது உடல் பொதுமக்கள், ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்பட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து ரசிகர்கள் நீண்ட வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

Image

மேலும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள குக்கிராமங்களில் இருந்தும் ரசிகர்களும், பொதுமக்களும் பெங்களூருவை நோக்கி சாரை சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் புனித் ராஜ்குமாரின் உடல் வைக்கப்பட்டு இருந்த கன்டீரவா மைதானம் முன்பு அலைகடலென மக்கள் கூட்டம் அலைமோதியது.

அவர்கள் முண்டியடித்துக்கொண்டு மைதானத்திற்குள் செல்ல முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் கூட்டத்தினரை ஒழுங்குப்படுத்த அவ்வப்போது போலீசார் தடியடி நடத்தினர். இருப்பினும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய, விடிய மாநிலத்தின் மூலைமுடுக்குகளில் இருந்து வந்த சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் நீண்ட கியூ வரிசையில் நின்று புனித் ராஜ்குமார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Image

கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று அவர்கள், புனித் ராஜ்குமார் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அமெரிக்காவில் இருந்து அவரது மகள் துருதி, விமானம் மூலம் டெல்லி வந்து அங்கிருந்து மற்றொரு விமானத்தில் பெங்களூரு வந்து சேர்ந்தார். அவரை போலீசார் பாதுகாப்புடன் கன்டீரவா மைதானத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு தனது தந்தையின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.

இந்நிலையில், அதிகாலை 4 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் புறப்பட்டது. புனித் ராஜ்குமாரின் உடல் கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது பெற்றோர் நினைவிடம் அருகிலேயே 21 குண்டுகள் முழங்க அரசு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Views: - 532

0

0