கர்நாடக கல் குவாரியில் மீண்டும் வெடிவிபத்து..! 6 தொழிலாளர்கள் பலி..! பிரதமர் மோடி இரங்கல்..!
23 February 2021, 11:39 amஇன்று அதிகாலை கர்நாடகாவின் சிக்கபல்லாபூரில் தற்செயலாக நடந்த வெடிவிபத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். ஒரு கிராமத்தில் உள்ள ஒரு கல் குவாரியில் ஜெலட்டின் குச்சிகளை அப்புறப்படுத்தியபோது, தற்செயலாக வெடித்ததில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக ஜனவரி 22’ஆம் தேதி கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் சொந்த ஊரான சிவ்மோகாவில் உள்ள ஒரு குவாரியில் இதேபோன்ற வெடிவிபத்து நிகழ்ந்து 6 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது அதே போல் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கபல்லாப்பூர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கர்நாடக சுகாதார அமைச்சர் கே.சுதாகர் சம்பவ இடத்திற்குச் சென்று, பலியானவர்களின் உடல்கள் மோசமாக சிதைக்கப்பட்டு, அந்த இடமெங்கும் சிதறிக்கிடப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பெரேசந்திரா அருகே ஹிரெனகவள்ளியில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஜெலட்டின் குச்சிகளை அதிகமாகப் பயன்படுத்துவதற்கு எதிராக உள்ளூர்வாசிகள் அளித்த புகார்களைத் தொடர்ந்து பிப்ரவரி 7’ஆம் தேதி காவல்துறையினர் குவாரி செயல்பட தடை விதித்தனர். எனினும், குவாரி இரகசியமாகத் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. பிறகு சில நாட்களுக்கு முன்பு மற்றொரு சோதனை நடத்தப்பட்டது. மேலும் ஒப்பந்தக்காரருக்கு இனி ஜெலட்டின் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் இன்று அதிகாலை வெடிபொருட்களை அப்புறப்படுத்த முயன்றபோது தற்செயலாக அது வெடித்துள்ளது.
இதற்கிடையில், வெடிபொருட்களை சட்டவிரோதமாக சேமித்து வைத்திருந்த சுரங்கங்களின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுதாகர் கூறினார். இந்த விவகாரத்தில் போலீஸ் விசாரணைகள் நடந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
“கர்நாடகாவின் சிக்கபல்லாப்பூரில் நடந்த விபத்தால் உயிர் இழப்பு ஏற்பட்டது. துயரமடைந்த குடும்பங்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.” என்று பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0
0