கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்தார் முதல்வர்..! ஏழு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..!
13 January 2021, 6:51 pmகர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இன்று தனது அமைச்சரவையை விரிவுபடுத்தி, ஏழு புதிய அமைச்சர்களை இணைத்துக் கொண்டுள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் மத்திய தலைமை உட்பட பல நாட்கள் பரபரப்பான கலந்துரையாடல்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இன்று பதவியேற்றவர்கள் எம்டிபி நாகராஜ், உமேஷ் கட்டி, அரவிந்த் லிம்பாவலி, முருகேஷ் நிரணி, ஆர் சங்கர், சிபி யோகீஸ்வரா மற்றும் எஸ்.அங்காரா ஆவர்.
இருப்பினும், அமைச்சரவை விரிவாக்கம் சர்ச்சை இல்லாமல் நடக்கவில்லை. எடியூரப்பாவை விமர்சித்த விஜயபுரா நகர எம்.எல்.ஏ பசனகவுட பாட்டீல் யட்னல், முதல்வர் பிளாக் மெயில் செய்யப்படுவதாகவும், நீண்ட கால பணி அல்லது நேர்மையை கருத்தில் கொள்ளாமல் நியமனங்கள் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
முதல்வரும் அவரது குடும்பத்தினரும் கர்நாடகாவில் பாஜகவை கடத்திச் சென்றுள்ளனர் என்று குற்றம் சாட்டிய அவர், மாநிலத்தில் உள்ள எடியூரப்பாவின் குடும்பத்தினரிடமிருந்து வம்ச அரசியலை முடிவுக்குக் கொண்டுவருமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.
அமைச்சரவையில் தற்போது 27 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் ஏழு பேர் இன்னும் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.