மேகதாது அணையை கட்ட துடிக்கும் கர்நாடகா : மத்திய அமைச்சரை சந்தித்த முதலமைச்சர் எடியூரப்பா..!!

13 July 2021, 12:42 pm
megatadu dam karnataka cm - updatenews360
Quick Share

டெல்லி : மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா சந்தித்து பேசினார்.

தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கு இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இருப்பினும், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் கடிதம் அனுப்பிய மு.க.ஸ்டாலின், மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Cm stalin - yediyurappa - updatenews360

இதற்கிடையே, அண்மையில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, மேகதாது அணைக்கட்ட வேண்டும் என்றால், தமிழக அரசின் கருத்தை கேட்காமல் மத்திய அரசு அனுமதியளிக்காது என மத்திய அமைச்சர் உறுதியளித்ததாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

இதைத் தொடர்ந்து, தமிழக அனைத்துக்கட்சி கூட்டத்திலும் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடகா அமைச்சர்கள் சூளுரைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜல ஜீவன் குடிநீர் திட்டத்தை துவக்கி வைப்பதற்காக மத்திய ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கர்நாடகா மாநிலம் பெங்களூரூ சென்றார். அங்கு அவரை கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, மாநில சட்டத்துறை மற்றும் உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, சிறு நீர்பாசனத்துறை அமைச்சர் மாதுசாமி ஆகியோர் சந்தித்து பேசினர்.

அப்போது, மேகதாது அணைக்கான ஒப்புதல் தொடர்பாக கர்நாடக அரசு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மேகதாது அணை தொடர்பாக கர்நாடாக முதலமைச்சர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 178

0

0