விதி மீறி வீட்டிலேயே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்நாடக அமைச்சர்..! அறிக்கை கேட்ட மத்திய அரசு..!

2 March 2021, 7:55 pm
Krnataka_Agri_Minister_BC_Patil_UpdateNews360
Quick Share

கர்நாடக வேளாண் அமைச்சர் பி.சி. பாட்டீல் இன்று மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவமனைக்கு பதிலாக தனது வீட்டிலேயே கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டு சர்ச்சையை கிளப்பினார். 64 வயதான பாட்டீல் மற்றும் அவரது மனைவி ஹவேரி மாவட்டத்தில் உள்ள அவரது ஹிரேகூர் இல்லத்தில் தடுப்பூசி பெற்றனர். 

தடுப்பூசி இயக்கத்தின் இரண்டாம் கட்டம் நேற்று தொடங்கியுள்ள நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட தீவிர உடல்நலப் பிரச்சினை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் கர்நாடக அமைச்சரின் செயலை கவனத்தில் கொண்ட மத்திய சுகாதார அமைச்சகம், உடனடியாக நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசிடம் கோரியுள்ளது. “இது நெறிமுறையில் அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம்” என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் சர்ச்சையைக் கிளப்பிய இந்த சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

வீட்டிலேயே தடுப்பூசி எடுக்க அவர் எடுத்த முடிவு குறித்து பலர் கேள்வி எழுப்பினர். அதை மருத்துவமனையில் பெறுவதே நெறிமுறை என்று மாநில சுகாதார அமைச்சர் கே.சுதாகர் கூறினார். பாட்டீலின் நடத்தை குறித்து அதிருப்தி தெரிவித்த அவர், மருத்துவமனைக்கு வர மருத்துவக் குழு அவரை வற்புறுத்தியிருக்க வேண்டும் என்றார்.

“முன் அனுமதி இல்லாவிட்டால், தடுப்பூசி போட யாரும் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. தடுப்பூசி போடுவதற்காக வீட்டிற்குச் செல்வது தவறு” என்று சுதாகர் கூறினார். வீட்டிலேயே தடுப்பூசிகளை வழங்க வேண்டாம் என்று மருத்துவர்களுக்கு சுற்றறிக்கை வெளியிடுவேன் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் பதிலளித்த முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா, தடுப்பூசி போடுவதில் இடத்தை விட தடுப்பூசி போடுவது தான் மிக முக்கியமானது என்றார்.

இதற்கிடையில், தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும், பொதுமக்களுக்கு தொல்லை தருவதை தவிர்க்க விரும்புவதாகவும் பாட்டீல் தற்காத்துக் கொண்டார். “நான் ஏதேனும் திருட்டு அல்லது கொள்ளை செய்திருக்கிறேனா? வீட்டிலேயே தடுப்பூசியை மட்டுமே எடுத்துக்கொண்டேன். அது குற்றம் அல்ல” என்று அமைச்சர் கூறினார்.

தான் தடுப்பூசி போட்டுக்கொண்டது பகிரங்கமாகிவிட்டது கூட நல்லது தான் என்றும் இது மற்றவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார். அவர் மருத்துவமனைக்குச் சென்றிருந்தால், அங்கு காத்திருக்கும் மக்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் என்று பாட்டீல் கூறினார்.

Views: - 7

0

0