காஷ்மீர் பிரிவினைவாதிக்கு எதிராக உபா சட்டம்..! டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

22 December 2020, 4:11 pm
aasiya_updatenews360
Quick Share

இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தது, தேசத்துரோகம் மற்றும் நாட்டில் பயங்கரவாத செயல்களைச் செய்ய சதி செய்ததாக காஷ்மீரி பிரிவினைவாதி ஆசியா ஆண்ட்ராபி மற்றும் அவரது இரு கூட்டாளிகள் மீது குற்றச்சாட்டுகளை வழக்காக பதிவுசெய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானின் ஆதரவோடு, அங்குள்ள பயங்கரவாத அமைப்புகள் உட்பட பலரின் துணையுடன் இந்தியாவுக்கு எதிராக போரை நடத்துவதாக ஆசியா ஆண்ட்ராபி மீது குற்றம் சாட்ட போதுமான முகாந்திரம் இருப்பதால், டெல்லி நீதிமன்றம் இந்த நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு நீதிபதி பர்வீன் சிங், ஆண்ட்ராபி மற்றும் அவரது கூட்டாளிகளான சோஃபி ஃபெமீடா மற்றும் நஹிதா நஸ்ரீன் ஆகியோரை இந்திய குற்றவியல் சட்டங்கள் மட்டுமல்லாது உபா சட்டத்தின் கீழ் தண்டிக்கக்கூடிய பல்வேறு குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட்டார். முன்னதாக அவர்கள் ஏப்ரல் 2018’இல் கைது செய்யப்பட்டனர்.

தடைசெய்யப்பட்ட அமைப்பான துக்தரன்-இ-மிலத்தின் (தேசத்தின் மகள்கள்) தலைவராக இருந்த ஆண்ட்ராபி, சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதோடு, இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் கடுமையாக ஸ்திரமின்மைக்கு உட்படுத்தும் செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் கடுமையாக சீர்குலைக்கும் சதி மற்றும் செயல்களில் ஈடுபட்டதாக என்ஐஏ கூறியது.

சமூக ஊடகங்களில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம், பாகிஸ்தானிய அமைப்புகளின் ஆதரவைக் கோருவதற்கான ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை அவர்கள் நடத்தி வந்தனர். இதில் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவை ஏற்பாடு செய்வதும் அடங்கும்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் என்.ஐ.ஏ அவர்கள் மீதும் அமைப்பு மீதும் வழக்கு பதிவு செய்தது.

இந்தியாவின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் கிளர்ச்சி தூண்டுதல்கள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுகளை பரப்புவதற்கு அவர்கள் பல்வேறு ஊடக தளங்களை பயன்படுத்தி வந்ததாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

ஆசியா ஆண்ட்ராபி மூலம் துக்தரன்-இ-மிலத் இந்தியாவில் இருந்து ஜம்மு காஷ்மீரை பிரிக்க வேண்டும் என்று பகிரங்கமாக வாதிட்டதுடன், ஜிகாத் மற்றும் நாட்டிற்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தவும் அழைப்பு விடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் காஷ்மீர் பிரிவினைவாதிகள் மீது உபா உள்ளிட்ட கடுமையான சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

Views: - 5

0

0