பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு…!

14 February 2020, 2:38 pm
Modi Kejriwal updatenews360
Quick Share

டெல்லி முதல்வராக பதவியேற்கவுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இவ்விழாவுக்கு பிரதமர் மோடியை அழைத்துள்ளார்.

தேர்தல் களம் என்று வந்துவிட்டால் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் வசைமாறி பொழிவதும்; தூற்றிக் கொள்வதும் வாடிக்கை. தேர்தல் முடிவுக்கு பிறகு வெற்றி பெற்றவருக்கு தோல்வியடைந்தவர் வாழ்த்து சொல்லி, அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்துவது, தமிழகத்தில் உள்ளதோ இல்லையோ, வட மாநிலங்களில் சகஜமான ஒன்று.

டெல்லி தேர்தல் பிரசாரத்திலும் ஆம் ஆத்மி தலைவர்களை பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் கடுமையாக விமர்சித்தனர். எனினும், தேர்தல் வெற்றிக்கு பிறகு கெஜ்ரிவாலுக்கு முதல் ஆளாக மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வரும் 16ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறையாக பதவியேற்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சிக்கு அரசியல்வாதிகள் யாரும் அழைக்கப்படமாட்டார்கள் என்று ஆம் ஆத்மி தரப்பில் முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்திருக்கிறார். எனினும் இதில் பிரதமர் கலந்து கொள்வாரா என்பது தெரியவில்லை.

மொத்தம் 70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சிக்கு 62 இடங்கள், பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.