சிறுவர்களை வைத்து சர்ச்சை ஓவியம்..! ரெஹானா பாத்திமா காவல்துறையிடம் சரண்..!

9 August 2020, 11:31 am
rehana_fathima_updatenews360
Quick Share

சபரிமலை விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய கேரளாவைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா, தனது சர்ச்சைக்குரிய வீடியோ தொடர்பாக நேற்று மாலை போலீசிடம் சரணடைந்தார். ஒரு நாள் முன்னதாக, கேரள உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அவர் அளித்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

அவர் மேல் போக்ஸோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரெஹானா, தனது நிர்வாண உடலின் மேல் பகுதியில் தன்னுடைய 14 வயது சிறுவனும், 8 வயது சிறுமியும் ஓவியம் வரைவதைக் காட்டும் ‘பாடி ஆர்ட் அண்ட் பாலிடிக்ஸ்’ என்ற வீடியோ கிளிப்பை யூடியூபில் பதிவேற்றியிருந்தார்.

இதற்கு கடும் விமர்சனம் எழுந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்படுவதை தவிர்க்க கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் நிராகரித்த நிலையில் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் அங்கும் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கவில்லை.

அங்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் இது ஆபாசத்தை பரப்பிய செயல் என்று குறிப்பிட்டது. மேலும் “வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு இதன் மூலம் என்ன அபிப்ராயம் கிடைக்கும்?” என்று நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

இந்நிலையில் அவர் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில், “எதிர்பார்த்த ஜாமீன் கிடைக்காத சூழலில், இன்று மாலை விசாரணை அதிகாரி முன் சரணடைகிறேன். மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பேன்.

பாலின சமத்துவம் மற்றும் ஒரு பெண்ணின் உடலை தீவிரமாக பாலியல் மயமாக்குவதற்கு எதிரான சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை ஆதரித்த அனைவரிடமும் அன்பு செலுத்துகிறேன். நாங்கள் சொல்வது சரிதான் என்பதை காலம் நிரூபிக்கட்டும்.” எனத் தெரிவித்தார்.

ரெஹானா 2018 அக்டோபரில் சபரிமலை கோயில் ஆலயத்தில் நுழைவது தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவர் கொச்சியைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல் ஊழியர் என்பது தெரியவந்ததை அடுத்து, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆர்வலர்கள் அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து கடந்த 18 மாதங்களாக, அவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பி.எஸ்.என்.எல் விசாரணையில் அவரது பேஸ்புக் செய்திகள் வகுப்புவாத பதட்டத்தை ஏற்படுத்தியதாகவும், அவர் சேவை விதிகளை மீறியதாகவும் கண்டறியப்பட்ட பின்னர், ஒழுங்கு நடவடிக்கையாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 11

0

0