“விமான நிலையத்தை நாங்களே நிர்வகித்துக் கொள்கிறோம்” – தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கேரள அரசு எதிர்ப்பு..!

20 August 2020, 11:23 am
Quick Share

மாநில அரசு முன்வைத்த கோரிக்கைகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்காத நிலையில், மத்திய அரசின் முடிவுக்கு நாங்கள் ஒத்துழைப்பது சற்று கடினம் என, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள மிக முக்கிய விமான நிலையங்களான ஜெய்ப்பூர், குவஹாத்தி, மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொது மற்றும் தனியார் பார்ட்னர்ஷிப் மூலம் அதானி குழுமத்திடம் 50 வருடங்களுக்கு குத்தகைக்கு விட மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.

இதற்கு கேரள மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு எங்களால் ஒத்துழைப்பு வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள பினராயி விஜயன், மாநில அரசு முன்வைத்த கோரிக்கைகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்காத நிலையில், மத்திய அரசின் முடிவுக்கு நாங்கள் ஒத்துழைப்பது சற்று கடினம்தான் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

மட்டும் இன்றி, இது எங்கள் விருப்பத்திற்கு முரனாக எடுக்கப்பட்டுள்ள முடிவு எனவும், இதில் பிரதமர் என்ற பொருப்பில் நீங்கள் தலையிட்டு மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்வதாகவும் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். மாநில அரசு முக்கிய பங்குதாரராக உள்ள நிலையில் இதை ஏன் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ள பினராயி விஜயன், கேரள மாநில அரசு கொச்சி மற்றும் கண்ணூர் ஆகிய விமான நிலையங்களை சிறப்பாக நிர்வகித்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.