உச்சம் தொட்ட கொரோனா.! மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு..! மீண்டும் முதலிலிருந்து தொடங்குகிறதா கேரளா..?

By: Sekar
2 October 2020, 2:24 pm
Corona_Kerala_Updatenews360
Quick Share

மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த ஐந்துக்கும் மேற்பட்டோர் கூடுவதைத் தடைசெய்து, கேரள அரசு 144 தடை உத்தரவை மாநிலம் முழுவதற்கும் விதித்துள்ளது.

தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா நேற்று இரவு வெளியிட்ட ஒரு உத்தரவில், கூட்டங்கள் தொற்றுநோய்களின் பரவல் அபாயத்தை ஏற்படுத்துவதாகவும், இந்த உத்தரவு அக்டோபர் 3’ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அக்டோபர் 31 வரை அமலில் இருக்கும் என்றும் கூறினார்.

கேரளாவின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை நேற்று இரண்டு லட்சம் என்ற மைல்கல்லைக் கடந்தது. மாநிலத்தில் நேற்று மட்டும் 8,135 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய 29 இறப்புகளுடன் 771’ஆக உயர்ந்தது.

சமீபத்திய வாரங்களில் புதிய பாதிப்புகள் விரைவாக அதிகரித்து வரும் தென் மாநிலமாக கேரளா உள்ளது. இந்தியாவின் முதல் கொரோனா பாதிப்பு கேரளாவில் பதிவான ஏழு மாதங்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 11’ஆம் தேதி கேரளாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து வெறும் 13 நாட்களில், செப்டம்பர் 24 அன்று மாநிலத்தில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 1.50 லட்சத்தைத் தொட்டது. மேலும் பரவலின் வேகம் மேலும் அதிகரித்து, சமூக விலகல் மற்றும் முககவசம் அணிவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை எச்சரிக்க தூண்டியது.

தற்போது, ​​கேரளாவில் 72,339 பேர் தொற்றுநோய்க்கான சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளின் தனிமை வார்டுகளில் 30,258 பேர் உட்பட 2.43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு கேரள அரசு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் முதற்கட்டமாக 144 தடையுத்தரவை, மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பின் கீழ் மாநிலம் முழுவதும் தீவிரமாக அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

“மாநிலத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் வெளிச்சத்தில், பொது சபைகள் மற்றும் கூட்டங்கள் தொற்றுநோய்களின் பரவலுக்கான அபாயத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, ஒரே நேரத்தில் ஐந்து பேருக்கும் மேல் கூட அனுமதிக்க முடியாது. சமூக இடைவெளியை அமல்படுத்துவதற்கு, 1973’ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைக் குறியீட்டின் பிரிவு 144’இன் விதிகள் செயல்படுத்தப்படும்.” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டங்களில் கள நிலவரத்தை மதிப்பிடுவதற்கும், சிஆர்பிசி பிரிவு 144’ன் கீழ் தொடர்புடைய ஏற்பாடுகள் மற்றும் உத்தரவுகளைப் பயன்படுத்தி நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“கட்டுப்பாட்டு மண்டலங்களிலும், நோய் பரவக்கூடிய குறிப்பிட்ட பகுதிகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். திருமணங்கள், இறுதிச் சடங்குகள் போன்றவற்றுக்கு தற்போதுள்ள தளர்வுகள் தொடரப்படும். மேலும் அந்தந்த மாவட்டங்களின் கள நிலைமையை பொறுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் நடவடிக்கைகளை வெளியிடும்.” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Views: - 48

0

0