பினராயி விஜயன் பதவி விலகக் கோரி சத்தியாகிரகம்..! போராட்டத்தில் குதித்த கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா..!

3 August 2020, 2:45 pm
Kerala_Ramesh_Chennithala_UpdateNews360
Quick Share

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்திய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (யுடிஎஃப்) பல தலைவர்கள், தங்கக் கடத்தல் வழக்கில் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி இன்று ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்துகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சத்தியாக்கிரகத்தைத் தொடங்கினார். அதே நேரத்தில் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர், மற்ற அலுவலக பொறுப்பாளர்களுடன் கேரள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சதியாகிரகத்தை நடத்தி வருகின்றனர்.

“ஸ்பீக் அப் கேரளா என்ற போராட்டத்தை நாங்கள் நடத்தி வருகிறோம். இதில் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் உள்ளிட்ட பல்வேறு யு.டி.எஃப் தலைவர்கள் கொரோனா நெறிமுறைக்கு இணங்க சத்தியாக்கிரகத்தை தங்கள் வீடுகளில் அல்லது அலுவலகங்களில் நடத்துகிறார்கள். முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய நாங்கள் கோருகிறோம். மாநில அரசு வழங்கிய பல்வேறு சட்டவிரோத நியமனங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து சிபிஐ விசாரணையைத் தொடங்க வேண்டும்.” என்று ரமேஷ் சென்னிதாலா கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “மாநில மற்றும் நாட்டின் மக்களுக்கு ஒரு தீவிரமான பிரச்சினையாக தங்கக் கடத்தல் வழக்கு மாறிவிட்டது. முதலமைச்சர் அலுவலகமும் இந்த விசாரணையில் உள்ளது. எனவே பினராயி விஜயன் மாநில முதல்வராக தொடர எந்த தார்மீக அதிகாரமும் இல்லை.” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, ஐ.யூ.எம்.எல் தலைவர் பி.கே.குன்ஹாலிகுட்டி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் எம்.கே.முனீர், ஆர்.எஸ்.பி தலைவர் என்.கே. பிரேமச்சந்திரன் உள்ளிட்ட பல மூத்த யு.டி.எஃப் தலைவர்கள் முதலமைச்சர் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரி அந்தந்த தொகுதிகளில் சத்தியாகிரகத்தை நடத்தி வருகிறார்கள். மேலும் சிபிஐ விசாரணை அவசியம் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்தியாகிரகத்தின் மாநில அளவிலான திறப்பு விழாவை கேரளாவுக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் வீடியோ அழைப்பு மூலம் மேற்கொண்டார். நிறைவு விழாவில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக முதல்வர் பதவி விலகக் கோரி பாஜக சனிக்கிழமை 18 நாள் நீடித்த சத்தியாகிரகத்தை ஆரம்பித்தது. இந்நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளது பினராயி விஜயன் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Views: - 39

0

0