கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கரைத் தொடர்ந்து சிக்கிய மற்றொரு அதிகாரி..? சிக்கலில் கேரள அரசு..!

25 November 2020, 8:04 pm
Pinarayi_Vijayan_UpdateNews360
Quick Share

இராஜதந்திர லக்கேஜ்கள் மூலம் தங்கம் கடத்தப்பட்டதன் பின்னணியில் நடந்த பண மோசடி குறித்து விசாரிக்கும் அமலாக்க இயக்குநரகம், முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளர் ரவீந்திரனை விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியது.

ரவீந்திரன் வரும் வெள்ளிக்கிழமை கொச்சியில் உள்ள அமலாக்க இயக்குனரக அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். இதன் மூலம் ரவீந்திரனுக்கு இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், அமலாக்கத்துறை முதல் நோட்டிசை அனுப்பியது. ஆனால் ரவீந்திரனுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்நிலையில் தற்போது ரவீந்திரன் முழுமையாக குணமடைந்துள்ளார் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அவருக்கு நேரடியாகவே வழங்கப்பட்டது. ஆனால் அவர் இதுவரை அறிவிப்புக்கு பதிலளிக்கவில்லை என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் அளித்த அறிக்கையில் ரவீந்திரனின் பெயர் வெளிவந்தது.

“ஸ்வப்னாவுக்கும் ரவீந்திரனுக்கும் இடையிலான தொடர்பு அதிகாரப்பூர்வ நோக்கத்திற்காக இருந்ததா என்பதை நாங்கள் சரிபார்க்க வேண்டும். முதலமைச்சரின் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கர் மாநில அரசு திட்டங்கள் மூலம் லஞ்சம் பெறுகிறார் என்பது தெளிவாகத் தெரிந்திருப்பதால், ரவீந்திரனும் அத்தகைய ஊழல்களில் ஈடுபட்டாரா என்பதை நாங்கள் சரிபார்க்க வேண்டும்.

தற்போது, ஸ்வப்னா மற்றும் சரித்தின் அறிக்கை மட்டுமே எங்களிடம் உள்ளது. அதன் அடிப்படையில் ரவீந்திரன் விசாரிக்கப்படுவார்.” என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கனவே கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளரால் அரசுக்கு களங்கம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது முதல்வரின் அந்தரங்க செயலாளரும் சிக்குவது பினராயி விஜயனுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.