அமலாக்க இயக்குனரக விசாரணை ஓவர்..? நீதிமன்றக் காவலுக்கு மாற்றப்பட்டனர் தங்கக் கடத்தல் குற்றவாளிகள்..!

17 August 2020, 4:52 pm
Swapna_Suresh_UpdateNews360
Quick Share

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று முக்கிய குற்றவாளிகளான, சரித், ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் இன்று கொச்சி நீதிமன்றத்தால் ஆகஸ்ட் 26 வரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

எர்ணாகுளத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரையும் அனைத்துத் தரப்பு விசாரணைகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 26’ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்தது.

அமலாக்க இயக்குனரகம் இன்று விசாரணையின் போது, கேரள முதல்வர் அலுவலகத்தின் முன்னாள் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கருக்கு ஸ்வப்னா சுரேஷுடனான தொடர்பு குறித்து கூடுதல் விவரங்களை வெளியிட்டது.

“ஏப்ரல் 2017’ல், ஸ்வப்னா சுரேஷ் சிவசங்கருடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்குப் பயணம் செய்திருந்தார். மேலும், ஏப்ரல் 2018’இல், ஸ்வப்னா ஓமனுக்குச் சென்று அதே காலகட்டத்தில் ஓமனுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிவசங்கரைச் சந்தித்தார். பின்னர் அவர்கள் ஓமனில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பினர்.” என்று அமலாக்க இயக்குநரகம் கூறியுள்ளது.

பொருளாதார குற்றங்கள் கண்காணிப்புக் குழு, 2018 அக்டோபர் மாதத்தில் ஸ்வப்னாவும் சிவசங்கரும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஒன்றாகப் பயணம் செய்ததாக அறிக்கை சமர்ப்பித்தது.

“அவர்கள் இருவரும் பின்னர் ஒன்றாகத் திரும்பினர். கேரளாவில் வெள்ள நிவாரணத்திற்காக அங்குள்ள இந்தியர்களின் உதவியை நாடுவதற்காக, கேரள முதல்வரின் ஐக்கிய அரபு எமிரேட் வருகையுடன் இந்த குறிப்பிட்ட பயணமும் இணைக்கப்பட்டது.

மேலும் குற்றங்களின் மூலம் கிடைத்த வருமானம், சிவசங்கரின் அறிவுறுத்தலின் படி ஸ்வப்னாவால் மூன்றாவது நபருடன் கூட்டாக திறக்கப்பட்ட வங்கி லாக்கரில் வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆழமான விசாரணை நடத்தப்பட உள்ளது.” என தனது அறிக்கையில் விரிவாகத் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று குற்றவாளிகளும் தங்களது அமலாக்க இயக்குனரக காவலை முடித்த பின்னர், இன்று நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். குறிப்பாக சிவசங்கரிடம் அமலாக்க இயக்குநரகம் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

இராஜதந்திர சேனல்கள் மூலம் மாநிலத்தில் தங்கம் கடத்தல் தொடர்பான விவகாரம், 14.82 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம், இராஜதந்திர லக்கேஜ்கள் என மறைக்கப்பட்ட பைகளின் மூலம் கடத்தப்பட்டதை அடுத்து, ஜூலை 5’ம் தேதி திருவனந்தபுரத்தில் சுங்க அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.