முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.3 கோடி ரூபாய்..! பொய்ப் புகாருக்காக இழப்பீட்டைச் செலுத்தியது கேரள அரசு..!

12 August 2020, 1:09 pm
Nambi_narayanan_Updatenews360
Quick Share

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, உளவு வழக்கு ஒன்றில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பினராயி விஜயன் அரசு இறுதியாக ரூ 1.3 கோடி இழப்பீடு வழங்கியது.

முன்னதாக ரூ 50 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, ரூ 60 லட்சத்தை வழங்குமாறு தேசிய மனித உரிமை ஆணையமும், கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியதை அடுத்து, மாநில அரசு ரூ 60 லட்சத்தை ஒப்படைத்திருந்தது. 

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு, ஒரு கோடி இழப்பீடு கேட்டு நம்பி நாராயணன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த வழக்கில் நிவாரணத் தொகையை இறுதிசெய்ய, முன்னாள் முதன்மைச் செயலாளர் ஜெயக்குமாரைக் கேரள அரசு நியமித்தது. ஜெயக்குமார் கேரள அரசுக்கு அளித்த பரிந்துரையில், நம்பி நாராயணனுக்கு 1.3 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஆலோசனை கூறியது.  

முன்னதாக 1994’ல் இரண்டு மாலத்தீவு உளவுத்துறை அதிகாரிகளுக்கு முக்கிய பாதுகாப்பு ரகசியங்களை கசிய விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு நம்பி நாராயணன் கைது செய்யப்பட்ட வழக்கில் 1.3 கோடி ரூபாய் இழப்பீட்டை ஒப்படைத்து வழக்கை தீர்ப்பதற்கு, பினராயி விஜயன் அமைச்சரவை கொள்கை ரீதியாக 2019 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில்  தற்போது அந்த தொகையை நம்பி நாராயணனுக்கு வழங்கியுள்ளது.

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி தனது 50 நாள் காவலில் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், தவறான அறிக்கை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் குற்றம் சாட்டினார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று சிபிஐ முடிவுக்கு வருவதற்கு முன்பு அவர் சுமார் இரண்டு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டியிருந்தது.

இதையடுத்து நம்பி நாராயணன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி தேவையில்லாமல் கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, மனக் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார் என்று கூறியது.

இந்நிலையில் கடந்த ஆண்டு மோடி அரசு அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கியது.

கடந்த ஆண்டு ஜனவரியில் கேரள திரிசூரில் நடந்த பேரணியில் உரையாற்றியபோது, ​​கேரள அரசியல் விவகாரங்களுக்காக, ஒரு விஞ்ஞானியின் நற்பெயருக்கு சேதம் விளைவித்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தினார்.

“தங்கள் சொந்த அரசியலுக்காக, அவர்கள் தேசிய நலனை சேதப்படுத்தினர் மற்றும் ஒரு விஞ்ஞானியை தொந்தரவு செய்தனர். நம்பி நாராயணனுக்கு பத்ம விருதை வழங்க நமது அரசாங்கத்திற்கு வாய்ப்பு கிடைத்தது ஒரு மரியாதை.” என்று பிரதமர் அப்போது கூறியிருந்தார்.

நம்பி நாராயணன் ஒரு சிறந்த விஞ்ஞானி மற்றும் கைது செய்யப்பட்ட நேரத்தில், அவர் இஸ்ரோவில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். மேலும் கிரையோஜெனிக்ஸ் பிரிவின் பொறுப்பாளராக இருந்தார்.

திட எரிபொருள் குறித்து இன்னும் ஆய்வு செய்துகொண்டிருக்கும் நிலையில், ​​இந்தியாவில் திரவ எரிபொருள் ராக்கெட் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் பொறுப்பு மற்றும் பி.எஸ்.எல்.வி ஏவுதலுக்குப் பயன்படுத்தப்படும் விகாஸ் எஞ்சின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 6

0

0