இளைஞர்களுக்கு சல்யூட் அடித்த காவல்துறை..! கேரளாவில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்

10 August 2020, 5:01 pm
Quick Share

விமான விபத்தின்போது மீட்புபணியில் ஈடுபட்ட இளைஞர்களை நேரில் சந்தித்து, அம்மாநில காவல்துறை சல்யூட் அடித்து மரியாதை செலுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து 191 பயணிகளுடன் வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இதில் அந்த விமானம் இரண்டாக உடைந்து சின்னாபின்னம் ஆனாது.

தொடர்ந்து, அந்த விமானத்தில் இருந்த, விமானி உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்தநிலையில் விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் அங்கிருந்த இளைஞர்கள் சிலர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கு முன்பே ஏராளமான உயிர்களை காப்பாற்ற உதவியுள்ளனர். தொடர்ந்து, விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் ராணுவத்தினர் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.

இந்த விபத்தின்போது, விமானத்தில் வந்த 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்த வந்த விமானம் என்று அறிந்தும், கொரோனா அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் அந்த இளைஞர்கள் பிற உயிர்களை காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மீட்பு பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். கேரள அரசு அவர்களின் உதவிக்கு நன்றி தெரிவித்ததுடன் உங்கள் உதவியை இந்த மாநிலம் என்றும் நினைவில் கொள்ளும் என தெரிவித்துள்ளது. மேலும், இளைஞர்கள் தங்கி இருக்கும் பகுதிக்கு நேரில் சென்ற அம்மாநில காவல்துறையினர், அவர்களை வரிசையில் நிற்க வைத்து சல்யூட் அடித்து மரியாதை செலுத்தியுள்ளனர். மனித நேயம் மிக்க இந்த செயல் அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 11

0

0