விரைவில் தெலுங்கானா முதல்வர் மாற்றம்..? கே.டி.ஆரை முதல்வராக்க ஆளும் கட்சிக்குள் அதிகரிக்கும் குரல்கள்..!

21 January 2021, 7:45 pm
KT_rama_rao_updatenews360
Quick Share

தெலுங்கானா சட்டமன்ற துணை சபாநாயகர் டி பத்மராவ் கவுட், தெலுங்கானாவின் ஆளும் கட்சியான டிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ் (கே.டி.ஆர்.) தெலுங்கானாவின் வருங்கால முதல்வர் என்று குறிப்பிட்டதோடு, மிக விரைவில் அவர் முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்வார் என்றும் கூறினார்.

இன்று ஹைதராபாத்தில் நடந்த ரயில்வே ஊழியர்கள் கூட்டத்தில் கே.டி.ராமராவ் முன்னிலையில் கவுட் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

தனது உரையை முடிக்கும்போது, ​​துணை சபாநாயகர் மிக விரைவில் கே.டி.ஆர் முதலமைச்சர் ஆவார் என்று கூறினார். “வருங்கால முதல்வரை நான் வாழ்த்துகிறேன்” என்று கவுட் கூறினார். ராமராவ் முதல்வரானதும் ரயில்வே ஊழியர்களின் பிரச்சினைகளை புறக்கணிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், ரயில்வே ஊழியர்களிடையே உரையாற்றிய கே.டி.ஆர், துணை சபாநாயகர் கூறிய கருத்துகளுக்கு பதிலளிக்கவில்லை.

இதற்கிடையில், கே.டி.ஆர் முதல்வராக ஆவதற்கு அனைத்து தகுதிகளும் இருப்பதாக தெலுங்கானாவின் பொதுவிநியோகத்துறை அமைச்சர் கங்குலா கரீம்நகரில் கூறினார். எனினும், “முதல்வர்-கேடிஆர்” பேச்சு குறித்து பாஜக தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை அவர் ஆட்சேபித்தார்.

“மக்கள் எங்களுக்கு ஒரு தெளிவான ஆணையை வழங்கினர். முதலமைச்சர் வேட்பாளருடன் பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று கமலகர் கூறினார். கடந்த ஆறு ஆண்டுகளில் கே.டி.ஆரின் முயற்சியால் தான் பல சர்வதேச நிறுவனங்கள் ஹைதராபாத்தில் முதலீடு செய்ததாக அவர் கூறினார்.

இருப்பினும், கே.டி.ஆர் ஒரு ஆண்டு முதல்வராக மட்டுமே வரலாற்றில் இடம் பெற முடியும் என்று பாஜக தலைவர் என்விஎஸ்எஸ் பிரபாகர் கூறினார்.

கே.டி.ஆர் என சுருக்கமாக அழைக்கப்படும் கே.டி.ராமராவ், தற்போதைய முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரசேகர் ராவ் தெலுங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, தனக்கு அடுத்த வாரிசாக தன்னுடைய மகனை முன்னிறுத்தி வருகிறார்.

இந்நிலையில், தற்போது கே.டி.ஆர் முதல்வர் கோஷம் அதிகரிப்பதன் மூலம், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த சந்திரசேகர் ராவ் திட்டமிட்டுள்ளாரா எனும் கேள்வியை எழுப்பியுள்ளது.

Views: - 0

0

0