சுற்றுலா பயணிகளை கவரும் ‘விஸ்டாடோம்’ ரயில் சேவை தொடக்கம்: அப்படி என்னதான் ஸ்பெஷல் இதுல?..

12 July 2021, 4:45 pm
Quick Share

பெங்களூரு: ரயில் பயணிகள் இயற்கையை ரசிக்கும் விதமாக ‘விஸ்டாடோம்’ பெட்டிகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வே சுற்றுலாப் பயணிகளைக் கவர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிறப்பு மலை ரயில்களை இயக்கி வருவதோடு மலைப் பிரதேசங்களில் ரயிலில் பயணிக்கும்போது பயணிகள் இயற்கையை ரசிக்கும் நோக்கில் ரயிலை மெதுவாக இயக்குவது உள்ளிட்டவற்றை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.

மேலும், சுற்றுலாவுக்காக சிறப்பு வழித்தடங்களையும் அறிவித்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் ‘விஸ்டாடோம்’ பெட்டிகளை தென்மேற்கு ரயில்வே வடிவமைத்துள்ளது. இந்தப் பெட்டிகளின் பக்கவாட்டிலும் கூரைப் பகுதிகளிலும் கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதனால், பயணிகள் இயற்கையை வெகுவாக ரசிக்க முடியும்.

இந்த, விஸ்டாடோம் பெட்டியில் உள்ள 44 இருக்கைகளும் பயணிகளின் வசதிக்காக 360 டிகிரி சுழலும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. தீ விபத்தைத் தடுப்பதற்கான வசதிகள், கண்காணிப்பு கேமரா, எல்இடி திரை, மொபைல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவை விஸ்டாடோம் பெட்டியில் உள்ளன.

முதல்கட்டமாக இரு பெட்டிகள் பெங்களூரு – மங்களூரு விரைவு ரயிலில் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த ரயில் இன்று தனது முதல் சேவையைத் தொடங்கியுள்ளது. சுற்றுலா வழித்தடங்களில் இதேபோல் மேலும் பல ரயில்களில் இந்த வகை பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதில் பயணிக்க சிறிய அளவில் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

Views: - 125

0

0