இந்திய விமானப்படையில் களமிறங்கும் உள்நாட்டு போர் விமானம்..! 48,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
13 January 2021, 7:14 pmபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாதுகாப்பு அமைச்சரவைக் குழு இன்று சுமார் 48,000 கோடி ரூபாய் மதிப்புள்ள மிகப்பெரிய உள்நாட்டு பாதுகாப்பு கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய விமானப்படைக்கு தேவையான போர் விமானங்களை, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து உள்நாட்டு போர் விமானமான எல்.சி.ஏ-தேஜாஸ்வாங்குவதற்கு ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்பந்தம் இந்திய பாதுகாப்பு உற்பத்தியில் சுயசார்புக்கு ஒரு முக்கிய பங்காற்றும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
எல்.சி.ஏ-தேஜாஸ் அடுத்த ஆண்டுகளில் இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார். எல்.சி.ஏ-தேஜாஸ் ஏராளமான புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. அவற்றில் பல இந்தியாவில் ஒருபோதும் முயற்சிக்கப்படவில்லை என்றும் மேலும் அவர் கூறினார்.
எச்ஏஎல் ஏற்கனவே அதன் நாசிக் மற்றும் பெங்களூரு பிரிவுகளில் இதற்காக இரண்டாவது வரிசை உற்பத்தி மையங்களை அமைத்துள்ளது. வளர்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் எச்.ஏ.எல் எல்.சி.ஏ-எம்.கே 1 ஏ உற்பத்தியை இந்திய விமானப்படைக்கு சரியான நேரத்தில் வழங்குவதற்காக வழிநடத்தும் என்று ராஜ்நாத் சிங் மேலும் கூறினார்.
இந்த முடிவு தற்போதைய எல்.சி.ஏ அமைப்பை கணிசமாக விரிவுபடுத்துவதோடு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்றும் அவர் கூறினார்.