வன்முறையில் ஈடுபட வாய்ப்பு..! சிங்கு எல்லையிலிருந்து விவசாயிகளை அகற்ற வலியுறுத்தி உள்ளூர் மக்கள் போராட்டம்..!

29 January 2021, 2:23 pm
Singhu_Border_Locals_Protest_UpdateNews360
Quick Share

குடியரசு தினத்தன்று தங்கள் டிராக்டர் பேரணியின் போது தேசியக் கொடியை அவமதித்ததால் விவசாயிகள் சிங்கு எல்லையில் உள்ள எதிர்ப்பு இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று நேற்று உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இன்றும் அவர்கள் விவசாயிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, போராட்டத்திலும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

விவசாயிகள் தங்கி போராடி வரும் பகுதிகளுக்கு அருகே சாலையில் கூடி, தேசிய கொடியை அவமதித்ததற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

நேற்று எதிர்ப்புத் தெரிவித்த பல்லாவைச் சேர்ந்த 35 வயதான தொழிலாளி சுரேஷ், “நான் எல்லைக்கு அருகிலுள்ள ஒரு பண்ணை வீட்டில் வேலை செய்கிறேன். ஆனால் டிசம்பர் முதல் வேலைக்குச் செல்ல முடியவில்லை. எனது குடும்பம் என்னை மட்டுமே நம்பியுள்ளது. நான் யாருடைய இயக்கத்திற்கும் எதிரானவன் அல்ல.

ஆனால் நான் அவர்கள் வெளியேற வேண்டும் என்று விரும்புகிறேன். இங்குள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் டெல்லியில் அனைத்து உறுதிமொழியையும் மீறி வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் இங்கேயும் அவர்கள் சேதத்தை ஏற்படுத்தலாம்.” எனக் கூறினார்.

இந்நிலையில் இன்றும் உள்ளூர் மக்கள், விவசாயிகளை வெளியேறுமாறு கூறி, எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

இதற்கிடையே சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகள், டெல்லி போலீசாரை தாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த, டெல்லி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும், போராட்டத்தில் குதித்துள்ள உள்ளூர் மக்களை கலைந்து செல்லும்படி டெல்லி போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஹரியானாவை ஒட்டி அமைந்துள்ள சிங்கு எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

Views: - 0

0

0