ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸ் வெற்றி..! பிரதமர் மோடி வாழ்த்து..!

8 November 2020, 10:56 am
Modi_Biden_UpdateNews360
Quick Share

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பிடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 77 வயதான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடென் வென்றுள்ளதன் மூலம், வெள்ளை மாளிகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மிக வயதான மனிதர் எனும் சிறப்பை பெற்றுள்ளார். ஜோ பிடென் அமெரிக்காவின் 46’வது ஜனாதிபதியாக இருப்பார்.

கடந்த காலத்தில் துணை அதிபராக ஜோ பிடென் வழங்கிய விலைமதிப்பற்ற பங்களிப்பை நினைவுகூர்ந்த மோடி, இந்தியா-அமெரிக்க உறவுகளை அதிக உயரத்திற்கு கொண்டு செல்ல மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட எதிர்பார்ப்பதாகக் கூறினார். 

“உங்கள் அற்புதமான வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஜோ பிடென்! துணை அதிபராக, இந்தோ-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதில் உங்கள் பங்களிப்பு முக்கியமானதாகவும் விலைமதிப்பற்றதாகவும் இருந்தது. இந்தியா-அமெரிக்க உறவுகளை அதிக உயரத்திற்கு கொண்டு செல்ல மீண்டும் ஒன்றாக இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்.” என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸையும் மோடி வாழ்த்தினார். அவர் நாட்டின் முதல் இந்திய வம்சாவளி, முதல் கருப்பு மற்றும் நாட்டின் முதல் ஆப்பிரிக்க அமெரிக்க துணை அதிபராக பல புதிய சாதனைகளை படைத்துள்ளார். ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் 2021 ஜனவரி 20’ஆம் தேதி நாட்டின் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியாக பதவியேற்பார்கள்.

“மனமார்ந்த வாழ்த்துக்கள் கமலாஹரிஸ்! உங்கள் வெற்றி, உங்கள் சித்திகளுக்கு மட்டுமல்ல, அனைத்து இந்திய-அமெரிக்கர்களுக்கும் மகத்தான பெருமை அளிக்கிறது. உங்கள் ஆதரவு மற்றும் தலைமை மூலம் துடிப்பான இந்தியா-அமெரிக்க உறவுகள் இன்னும் வலுவடையும் என்று நான் நம்புகிறேன்.” என்று மோடி ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

Views: - 20

0

0