மேடையிலேயே அமைச்சருக்கு முடிவெட்டிய இளைஞர்..! 60,000 ரூபாயைக் அள்ளிக்கொடுத்த அமைச்சர்..! ம.பி.’யில் ருசீகரம்..!
12 September 2020, 1:12 pmமத்திய பிரதேசத்தில் ஒரு சலூன் கடையைத் திறக்க விரும்பிய ஒரு இளம் முடிதிருத்தும் நபர் ஒருவர், மத்தியப் பிரதேச அமைச்சருக்கு மேடையிலேயே முடிவெட்டியதை அடுத்து வனத்துறை அமைச்சர் விஜய் ஷா அவருக்கு ரூ 60,000 தொகையை அந்த மேடையிலேயே கொடுத்து ஆச்சரியப்பட வைத்தார். இந்த சம்பவம் வியாழக்கிழமை காண்ட்வா மாவட்டம் கௌலைமலில் நடந்தது.
வனத்துறை அமைச்சர் விஜய் ஷா அப்பகுதியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டிருந்தபோது உள்ளூர் முடிதிருத்தும் இளைஞரான ரோஹிதாஸ் அவரது உதவியை நாடினார். இதையடுத்து விஜய் ஷா ஷா ரோஹிதாஸை மேடையில் அழைத்து அவரிடம் தனக்கு ஹேர்கட் மற்றும் ஷேவ் செய்யும் படி சொன்னார்.
இதையடுத்து முக கவசம் அணிந்த முடிதிருத்தும் இளைஞர், மேடையிலேயே அமைச்சரின் தலைமுடியை வெட்டி, அவருக்கு ஷேவ் செய்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.
வேலையில் திருப்தி அடைந்த விஜய் ஷா, உடனே பணத்தை கொடுத்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் முடிதிருத்தும் நபர்களிடமிருந்து ஹேர்கட் செய்வது பாதுகாப்பானது என்று மக்களுக்கு உறுதியளிக்க விரும்புவதாகவும் வனத்துறை அமைச்சர் கூறினார்.
“இந்த மக்கள் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். கடந்த சில மாதங்களாக வேலையில்லாமல் உள்ளனர். முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டால் அது பாதுகாப்பானது என்று மக்களுக்கு நம்பிக்கை அளிக்க எனது தலைமுடியை அந்த இடத்திலேயே வெட்டினேன்” என்று அமைச்சர் பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அமைச்சரின் விருப்ப நிதியில் இருந்து முடி திருத்தும் இளைஞருக்கு பணம் செலுத்தப்பட்டது என்று விஜய் ஷா கூறினார்.
சொந்தமாக சிறு தொழில்களைத் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு அரசாங்கம் வங்கிகள் மூலம் கடன்களை வழங்கும் என்று அவர் மேலும் கூறினார். அவர்கள் அசல் தொகையை மட்டுமே திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். அதே நேரத்தில் மாநில அரசு வட்டி செலுத்தும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
0
0