28’இல் 19 இடங்களில் வெற்றி..! பெரும்பான்மையை உறுதி செய்தது மத்தியபிரதேச பாஜக அரசு..!

11 November 2020, 10:26 am
shivraj_singh_chouhan_updatenews360
Quick Share

பெரும்பான்மையை தக்க வைக்க பாஜகவும், ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி காங்கிரசும், மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்களில் கடுமையாக போராடிய நிலையில் முடிவு பாஜவுக்கு சாதகமாக வந்து சிவராஜ் சிங் சவுகானின் ஆட்சியை உறுதி செய்துள்ளது.

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாஜக 19 இடங்களில் வென்றது மற்றும் வெறும் 9 இடங்களை மட்டுமே காங்கிரசால் பெற முடிந்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவல்களின்படி, பாஜக 49.5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. அங்கு காங்கிரஸ் 40.5 சதவீத வாக்குகளைப் பெற்றது. 

இந்த ஆண்டு மார்ச் மாதம், 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மாநில சட்டமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்தனர். இந்த ராஜினாமா முடிவு பாஜகவின் சிவ்ராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேச முதல்வராக நான்காவது முறையாக பொறுப்பேற்க வழி வகுத்தது.

இந்நிலையில் பீகார் சட்டசபைத் தேர்தலின் பொது, நவம்பர் 3’ம் தேதி 28 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 25 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததையும், முன்னதாக மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் இறந்ததையும் தொடர்ந்து 28 இடங்களில் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன.  

காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குகளின் எண்ணிக்கை இறுதியாக இன்று அதிகாலை 3 மணியளவில் முடிந்தது. கமல்நாத்த்தால் “ஐட்டம்” என சர்ச்சைக்குரிய வகையில் விமர்சிக்கப்பட்ட பாஜக வேட்பாளரும் அமைச்சருமான இமார்டி தேவி காங்கிரஸின் சுரேஷ் ராஜேவிடம் தப்ரா தொகுதியை இழந்தார்.

சன்வர் தொகுதியில் காங்கிரஸின் பிரேம்சந்த் குடுவை 53,264 வாக்குகள் வித்தியாசத்தில் நீர்வளத்துறை அமைச்சரும் பாஜக வேட்பாளருமான துளசி சிலாவத் தோற்கடித்தார்.

இதற்கிடையே இது மத்திய பிரதேச மக்களின் வெற்றி என்று முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறினார்.

“இது வளர்ச்சியின் வெற்றி! இது விசுவாசத்தின் வெற்றி! இது சமூக நீதியின் வெற்றி! இது ஜனநாயகத்தின் வெற்றி! இது மத்திய பிரதேச மக்களின் வெற்றி! மக்கள் பாஜகவுக்கு தங்கள் ஆசீர்வாதங்களை வழங்கினர். எங்களுக்கு நம்பிக்கை தெரிவித்தனர். மாநில நலனை பாதிக்கும் வகையில் எதுவும் நடக்காது என்று நான் உறுதியளிக்கிறேன்.” என சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், மாநிலத்தில் ஈடு இணையற்ற தேர்வாக பாஜக உருவானது எனத் தெரிவித்துள்ளார்.

தோல்வியை ஒப்புக் கொண்ட முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், மக்களின் ஆணையை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார். “நாங்கள் ஆணையை ஏற்றுக்கொள்கிறோம். வாக்காளர்களை சென்றடைய நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டோம். இடைத்தேர்தலில் பங்கேற்ற அனைத்து வாக்காளர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்” என்று முன்னாள் முதல்வர் கமல்நாத் வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் பாஜகவுக்கு மத்திய பிரதேச மக்களவையில் தனிப்பெரும்பான்மை கிடைத்துள்ளது. 

Views: - 32

0

0