மகனின் பத்தாம் வகுப்புத் தேர்வுக்காக 105 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற தந்தை..! நெகிழ வைத்த சம்பவம்..!

20 August 2020, 7:56 pm
Tribal_Man_103Km_Cycling_UpdateNews360
Quick Share

மத்திய பிரதேச தலைநகர் போபாலுக்கு தென்மேற்கே 251 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பழங்குடியினத் தொழிலாளி, தனது மகனை செவ்வாய்க்கிழமை மாவட்ட தலைமையகத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்திற்கு அழைத்துச் செல்ல சுமார் 105 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் மிதித்துச் சென்றதாக தொழிலாளி மற்றும் அவரது மகன் தெரிவித்துள்ளனர்.

தார் மாவட்டத்தின் மனவார் தாலுக்காவில் உள்ள பயதிபுராவில் வசிக்கும் ஷோபரம், 10’ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுத 105 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்று தேர்வு மையத்தை அடைந்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய ஷோபரம், “ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குப் பிறகு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பேருந்துகள் இப்போது கூட இயங்கவில்லை. கிராமத்தில் எனக்கு உதவ யாரும் இல்லை. எனவே எனது சைக்கிளில் இங்கு வர முடிவு செய்தேன்.

நான் ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டு, ஒரு இரவை மனவர் நகரில் கழித்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு மண்டுவை அடைந்தேன். தேர்வு தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னரே தாரில் உள்ள தேர்வு மையத்தை அடைந்தோம்.” எனத் தெரிவித்துள்ளார்

தனது மகனின் தேர்வுகள் முடிவடையும் ஆகஸ்ட் 24 வரை தாரில் தங்குவேன் என்று அவர் கூறினார். அவர் சைக்கிளில் எடுத்துச் சென்ற ஒரு பையில் உணவை சமைக்க உணவு தானியங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களையும் கொண்டு வந்துள்ளார்.

அவர் மேலும், “நான் ஒரு தொழிலாளி, கல்வியறிவு இல்லாதவன் என்றாலும், என் மகன் ஒரு அதிகாரியாக வேண்டும் என்று எனக்கு ஒரு கனவு இருக்கிறது. கிராமத்தில் ஆசிரியரும் கல்வியும் கிடைக்காததால், எனது மகனுக்கு மூன்று பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. எனது மகன் மீண்டும் தேர்வை எழுதி தேர்ச்சி பெறும் வாய்ப்பை இழக்க விரும்பாததால் நாங்கள் இங்கு வந்தோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

எம்.பி. ஸ்டேட் ஓபன் ஸ்கூல் போர்டின் ருக் ஜனா நஹி திட்டத்தின் கீழ் ஷோபராமின் மகன் தனது தேர்வை எழுத வேண்டும். இதன் கீழ் எம்.பி. மேல்நிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாத 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை முடிக்க மற்றொரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால் மாவட்டத் தலைமையகத்தில் மறு தேர்வு மையம் தேர்வு செய்யப்பட்டதால், தந்தையும் மகனும் 100 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டியிருந்தது.

இது தொடர்பாக பேசிய சிறுவன், “நான் எனது வாய்ப்பை இழக்கவில்லை. நான் தாரை அடைந்து பரீட்சை எழுத வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் பஸ் சேவை இல்லாததால் என் தந்தை என்னை தேர்வு மையத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார்.” என்றார்.

தார் மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறை உதவி ஆணையர் பிரிஜேஷ் சந்திர பாண்டே கூறுகையில், “தந்தை மற்றும் மகன் இருவரின் கடினமான முயற்சிகள் குறித்து நான் அறிந்தேன். இது உண்மையில் ஊக்கமளிக்கிறது. ஆகஸ்ட் 24’ஆம் தேதி வரை அவர்கள் இங்கு தங்கியிருப்பதால், அவர்களின் உறைவிடம் மற்றும் உணவுக்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம். மேலும் அவர்கள் மீண்டும் தங்கள் கிராமத்திற்குச் செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்வோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 28

0

0