சிவசேனாவில் இணைந்த மஹாராஷ்டிர அமைச்சர் சங்கர் ராவ் கடக்..! அகமதுநகரை கட்டுக்குள் வைக்க அதிரடி முடிவு..!

12 August 2020, 11:18 am
Sankarao_Gadakh_Shiv_Sena_UpdateNews360
Quick Share

மகாராஷ்டிராவின் மண் மற்றும் நீர் பாதுகாப்பு அமைச்சர் சங்கர் ராவ் கடக் நேற்று முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் சிவசேனா கட்சியின் செயலாளர் மிலிந்த் நர்வேகர் முன்னிலையில் சிவசேனா கட்சியில் இணைந்தார். கடாக்கை சிவ்பந்தன் அணிவித்து முதல்வர் உத்தவ் தாக்கரே, அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைத்துக் கொண்டார்.

கடக் அகமதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நெவாசா தொகுதியிலிருந்து சுயேட்சையாக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். மேலும் சிவசேனா மற்றும் உத்தவ் தாக்கரேவுக்கு தேர்தலுக்குப் பின்னர் தனது ஆதரவை வழங்கிய முதல் சுயேட்சை இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

“ஒரு சிவ்சைனிக் என்ற முறையில், அகமதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி மற்றும் உள்ளூர் மக்களின் பிரச்சினைகளை என்னால் திறமையாக தீர்க்க முடியும்” என்று கடக் கூறினார்.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர், சிவசேனாவின் செயலாளர் மிலிந்த் நர்வேகர் முதலில் கடக்கிடம் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்து சிவசேனா கட்சியில் சேருமாறு கேட்டார். இதற்காக மிலிந்த் நர்வேகர் கடக்கிற்கும் சிவசேனைக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார்.

தேர்தல் முடிந்த உடனேயே, கடக் உத்தவ் தாக்கரேவை மாதேஸ்ரீயில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து, கடக் குடும்பத்தினர் சிவசேனா கட்சியின் ஒரு அங்கமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் சிவசேனாவுக்கு ஆதரவளிப்பதாக அவருக்கு உறுதியளித்தார்.

அமைச்சர் கடக்கின் தந்தையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான யஸ்வந்த்ராவ் கடக், சிவசேனா நிறுவனர் பாலாசாகேப் தாக்கரேவுடன் மிகவும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அகமத்நகர் மாவட்டத்தில் கடக் குடும்பத்திற்கு மிகவும் வலுவான பிடிப்பு உள்ளது. கடந்த வாரம் அகமதுநகரைச் சேர்ந்த சிவசேனா தலைவர் அனில் ரத்தோட் காலமானதை அடுத்து, அகமதுநகர் மாவட்டத்தில் கட்சிக்கு ஒரு பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது.

இது சிவசேனா கட்சிக்கு மிகவும் முக்கியமானது. எனவே, அகமதுநகர் மாவட்டத்தில் கட்சியை வழிநடத்தும் பொறுப்பு அமைச்சர் சங்கர்ராத் கடக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.

“கடந்த 10 ஆண்டுகளில், நானும் எனது குடும்பமும் தாக்கரே குடும்பத்துடன் தொடர்புடையவர்கள். இன்று, முதல்வர் உத்தவ் தாக்கரே கட்சியில் சேர்ப்பதன் மூலம் எனக்கு ஒரு பெரிய பொறுப்பை வழங்கியுள்ளார். உத்தவ் தாக்கரே விவசாயிகளின் கடன் தள்ளுபடி பிரச்சினையை தீர்க்க பணியாற்றிய விதம், வேலையின்மை மற்றும் கொரோனாவை எதிர்த்து போராடும் விதம் எனக்கு தூண்டுதலாக உள்ளது. அவருடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெறுவது எனக்கு அதிர்ஷ்டம் என்று நான் நினைக்கிறேன்.” என அமைச்சர் சங்கர் ராவ் கடக் கூறினார்.

ஆனால் சங்கர் ராவ் கடக்கிற்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பது, அகமது நகரில் கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சிக்குள் ஒருவரை இணைப்பது தவறில்லை என்றாலும் அவரிடம் ஒரு மாவட்டப் பொறுப்பை வழங்குவது நல்லதல்ல என கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.