மராட்டியத்தில் ஆட்டம் காட்டும் நைரோவைரஸ்..! இதற்கும் தடுப்பூசி கிடையாதாம்..! அரசு எச்சரிக்கை..!

29 September 2020, 1:13 pm
Congo_Fever_Palghar_Updatenews360
Quick Share

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் காங்கோ காய்ச்சல் பரவுவதால் எச்சரிக்கையாக இருக்குமாறு பால்கர் நிர்வாகம் இன்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டது. பொதுவாக காங்கோ காய்ச்சல் என்று அழைக்கப்படும் கிரிமியன் காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் (சி.சி.எச்.எஃப்) மனிதர்களிடையே உண்ணி மூலம் பரவுகிறது. 

கொரோனா வெடித்ததை அடுத்து, இது கால்நடை வளர்ப்பவர்கள், இறைச்சி விற்பவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு அதிகாரிகளுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. மேலும் சி.சி.எச்.எஃப்க்கு குறிப்பிட்ட மற்றும் பயனுள்ள சிகிச்சை இல்லாததால் சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குல்கராத்தின் சில மாவட்டங்களில் சி.சி.எச்.எஃப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மகாராஷ்டிராவின் எல்லை மாவட்டங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது என்று பால்கர் கால்நடை பராமரிப்பு துறையின் துணை ஆணையர் டாக்டர் பிரசாந்த்.டி.காம்ப்ளே ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்தார்.

பால்கர் குஜராத்தின் வல்சாத் மாவட்டத்திற்கு அருகில் உள்ளது. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

“இந்த வைரஸ் நோய் ஒரு குறிப்பிட்ட வகை உண்ணி மூலம் ஒரு விலங்கிலிருந்து இன்னொன்றுக்கு பரவுகிறது. பாதிக்கப்பட்ட விலங்குகளின் இரத்தத்துடன் தொடர்பு கொள்வதன் மூலமும், பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சியை சாப்பிடுவதன் மூலமும் இந்த நோய் மனிதர்களுக்கு பரவுகிறது” என்று சுற்றறிக்கை தெரிவித்துள்ளது.

“இந்த நோய் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், 30 சதவீத நோயாளிகள் இறக்கும் சூழல் உருவாகும்” என்று அது கூறியுள்ளது.

சி.சி.எச்.எஃப் என்பது புன்யவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த உண்ணி மூலம் பரவும் வைரஸால் (நைரோவைரஸ்) ஏற்படும் பரவலான நோயாகும். இந்த வைரஸ் கடுமையான ரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இது உலக சுகாதார அமைப்பின் படி 10 முதல் 40 சதவீதம் வரை இறப்பு விகிதத்துடன் உள்ளது.

இந்த நோய்க்கு எதிராக மக்கள் அல்லது விலங்குகளுக்கு தற்போது வரை தடுப்பூசி எதுவும் கண்டறியப்படவில்லை.