மீண்டும் மீண்டும் சோனியாவை சீண்டும் மம்தா… சரத்பவாருடன் திடீர் சந்திப்பு!! ஓரங்கட்டப்படும் காங்.,??

Author: Babu Lakshmanan
1 December 2021, 8:15 pm
mamata - sarath pawar - updatenews360
Quick Share

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசியது காங்., கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2025ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வலுவான எதிர்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க பெரும்பாலான கட்சிகள் விரும்புகின்றன. இந்தக் கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்., கட்சிகள் முயன்று வருகின்றன. ஆனால், பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் இரு கட்சிகளிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அதாவது, எதிர்கட்சிகளின் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய வேண்டும் என்பது சோனியா காந்தியின் விருப்பமாக உள்ளது. ஆனால், நாளுக்கு நாள் செல்வாக்கை இழந்து வரும் காங்கிரஸ் கட்சியின் மீது மம்தாவுக்கு நம்பிக்கை இல்லை என்பதால், அவர் தனித்து செயல்பட முடிவு செய்துள்ளார். இதற்காக, அவரே களத்தில் இறங்கி எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.

அண்மையில் டெல்லி பயணத்திற்கு முன்னதாக, சோனியா காந்தியை சந்திக்க வேண்டியது கட்டாயமா..? என்று கேள்வி எழுப்பி காங்கிரஸை கோபப்படுத்தினார். இதனிடையே, எதிர்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவதில், சோனியா – மம்தா இடையே போட்டி உருவாகியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மகாராஷ்டிராவில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மம்தா பானர்ஜி, நேற்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்செய் ராவத் மற்றும் உத்தவ் தாக்கரேவின் மகனும் மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை மம்தா பானர்ஜி இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது பாஜகவுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்குவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிகிறது.

மம்தாவின் இந்த செயல்பாடு சோனியாவுக்கு மேலும் எரிச்சலையூட்டியுள்ளது.

Views: - 405

0

0