மேகதாது அணை விவகாரம் : தமிழகத்தை முந்துகிறதா கர்நாடகா..? பிரதமரை சந்தித்து பேசிய எடியூரப்பா..!!

16 July 2021, 8:37 pm
yediyurappa - modi - - - updatenews360
Quick Share

டெல்லி : மேகதாது அணை கட்டுமானப் பணிகளுக்கு உடனே அனுமதி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் கடிதம் அனுப்பிய மு.க.ஸ்டாலின், மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை இரு மாநில நிர்வாகிகளும் சந்தித்து முறையிட்டு விட்டனர். குறிப்பாக, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனால், மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கப்போகிறது என்பது இரு மாநில மக்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், கர்நாடகாவிற்கு சில திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக சென்ற அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் சில அமைச்சர்கள் சந்தித்து பேசினர். அப்போது, மேகதாது அணையை கட்டுவதற்கு அனுமதியளிக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்த சந்திப்பிற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடியூரப்பா, பிற மாநிலங்களைப் பற்றி பேச விரும்பவில்லை என்றும், மேகதாது அணை திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்படும் எனக் கூறினார்.

அதேவேளையில், மேகதாது அணை விவகாரத்தில் எந்த மாநிலமும் பாதிக்காத வகையில், கர்நாடகா, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி, அதனடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றும மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தெரிவித்திருந்தார்.

ஆனால், கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. அவர்களுக்கு மத்திய அரசும் மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதாக தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், டெல்லிக்கு சென்றுள்ள கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, மேகதாது அணை கட்டுமானப் பணிகளுக்கு உடனே அனுமதி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் 18ம் தேதி டெல்லி சென்று முதலமைச்சரை சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அரசியல் வல்லுநகர்கள் கூறுகையில், “மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா, தமிழகத்தின் கோரிக்கையை கவனத்தில் எடுத்துக் கொள்வதை போல தெரியவில்லை. இதை உணர்ந்து மத்திய அரசை சந்தித்து இது தொடர்பாக பேச்சுவார்த்தையை தமிழகம் முன்னெடுத்திருக்க வேண்டும். முதற்கட்டமாக அனைத்துக் கட்சி குழுவினர் டெல்லி சென்று மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் கொடுத்துள்ளனர்.

இருந்தாலும், முதலமைச்சர் ஸ்டாலின் மீது பிரதமர் மோடிக்கு எப்போதும் ஒரு மரியாதை உண்டு. அதை மனதில் வைத்து அவரே நேரடியாக முதலில் பிரதமரை சந்தித்து பேசியிருக்க வேண்டும். தற்போது, கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா முந்திக் கொண்டார். அவர் பாஜக சேர்ந்தவர் என்ற கூடுதல் சிறப்பம்சமாக இருப்பதால், மேகதாது விவகாரத்தில் தமிழகத்தை விட கர்நாடகா ஒரு அடி முன்னோக்கி செல்வதாகத்தான் தெரிகிறது, என்றனர்.

Views: - 163

0

0

Leave a Reply