மீண்டும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டாரா மெஹபூபா முப்தி..! ஜம்மு காஷ்மீர் அரசியலில் பரபரப்பு..!
27 November 2020, 1:47 pmமக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி) தலைவர் மெஹபூபா முப்தி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் தன்னை மீண்டும் தடுப்பு காவலில் வைத்திருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து பகிரப்பட்ட ஒரு ட்வீட்டில், ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தால் புல்வாமாவிற்கு செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக மெஹபூபா முப்தி கூறினார். ஒரு வருடத்திற்கும் மேலாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மெஹபூபா முப்தி, கடந்த அக்டோபரில் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“நான் மீண்டும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். இரண்டு நாட்களில் இருந்து, புல்வாமாவில் உள்ள கட்சித் தலைவர் வாகீத் உர் ரஹ்மானின் குடும்பத்தினரை சந்திக்க என்னை அனுமதிக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மறுத்துவிட்டது” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். “வாகீத் உர் ரஹ்மான் ஆதாரமற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். எனது மகள் கூட வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்” என்று மெஹபூபா முப்தி மேலும் கூறினார்.
“பாஜக அமைச்சர்கள் மற்றும் அவர்களின் கைப்பாவைகள் காஷ்மீரின் ஒவ்வொரு மூலையிலும் சுற்ற அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் எனது விஷயத்தில் பாதுகாப்பு என்பது ஒரு பிரச்சினையாகும்” என்று அவர் கூறினார்.
வாகீத் உர் ரஹ்மானை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கடந்த புதன்கிழமை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஎஸ்பி தேவிந்தர் சிங் வழக்கு தொடர்பாக பிடிபி இளைஞர் பிரிவு தலைவர் வாகீத் இரண்டு நாட்கள் தொடர் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.
0
0
1 thought on “மீண்டும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டாரா மெஹபூபா முப்தி..! ஜம்மு காஷ்மீர் அரசியலில் பரபரப்பு..!”
Comments are closed.