மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை மாற்ற ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்..!
18 August 2020, 9:27 amமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை மத்திய கல்வித்துறை அமைச்சகம் என்று மாற்றுவதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஆட்சி நடந்த 1937ஆம் ஆண்டிலேயே கல்வித் துறை தன்னிச்சையாக இயங்கி வந்துள்ளது. அதன் பின் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி ஏற்றார்.
அவர் ஆட்சியில் இருந்து மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சி வரை கல்வித் துறை என்ற பெயரே விளங்கியது. அதாவது கடந்த 1985-ம் ஆண்டு, மத்திய கல்வித்துறை என்பது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ராஜீவ்காந்தி அமைச்சரவையில் முதல் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பி.வி.நரசிம்மராவ் இருந்தார்.
இந்தநிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த மாதம் வெளியிட்ட புதிய தேசியக் கல்விக்கொள்கையில் முக்கிய பரிந்துரையாக “ மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை மத்திய கல்வித்துறை அமைச்சகம் என்று மாற்றுவதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ஒப்புதல் கோரப்பட்டிருந்தது. இந்தநிலையில், ராம்நாத் கோவிந்த் அதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவை அமைத்தது. அந்த குழுவின்பரிந்துரையில்தான் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், கல்வித்துறையாக மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது.