இந்து, கிறிஸ்துவ மதத்திற்கு எதிராக கோஷமிட்ட சிறுவன்… PFI கூட்டம் குறித்து கவலை தெரிவித்த நீதிமன்றம்… அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
24 May 2022, 4:46 pm
Quick Share

கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய பேரணியில், மதக்கலவரத்தை ஊக்குவிக்கும் விதமாக சிறுவன் ஒருவன் கோஷமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், சிறுவன் ஒருவனும் பங்கேற்று இருந்தான். அந்த சிறுவன் ஒருவரின் தோள்பட்டையின் மீது அமர்ந்தவாறு, கோஷம் எழுப்ப, அதனை கூட்டத்தில் இருந்தவர்கள் பின்தொடர்ந்து முழங்கினர்.

அப்போது, இந்து, கிறிஸ்துவ மதங்களுக்கு எதிராக அந்த சிறுவன் முழக்கமிட்டிருந்தான். இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தாலும், இந்த வீடியோ அண்மையில் டிரெண்டாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் உள்பட பல்வேறு கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதோடு, சிறுவனை தூண்டி விட்டு பேசியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், அரசியல் கூட்டத்தில் மைனர் சிறுவன் கோஷங்களை எழுப்பிய விவகாரத்தில், குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் கொடுத்த அழுத்தத்தின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சிறுவனை கூட்டத்திற்கு அழைத்துச் சென்ற பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆலப்புழா மாவட்ட தலைவர் நவாஸ் வந்தனம் மற்றும் செயலாளர் முஜீப் என இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல, அரசியல் மற்றும் கலாச்சாரக் கூட்டங்களில் சிறுவர்களை அழைத்துச் சென்று, இதுபோன்று மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக நடந்து கொண்ட சம்பவம் வேதனை அளிப்பதாக கேரள உயர்நிதமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், வளர்ந்து வரும் தலைமுறையினர் மனதில் மதங்களுக்கு எதிரான கருத்துக்களை விதைப்பதாகவும், இந்த குழந்தை வளர்ந்து மேஜர் ஆகும் போது, இவன் மனதில் ஏற்கனவே மதங்களுக்கு எதிரான கருத்துக்களே நிரம்பி இருப்பதாகவும் நீதிபதி கோபிநாத் கூறியிருந்தார். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 721

0

0