“யாரோ ஒருவர் சொன்னால் நடந்து விடாது, இளைஞர்களின் செயல்களால் மட்டுமே சுயசார்பு பாரதத்தை அடைய முடியும்” :- மோடி உரை

24 January 2021, 7:56 pm
Modi_Speech_NCC_Cadets_UpdateNews360
Quick Share

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் இளைஞர்கள் மற்றும் கலைஞர்களுடனான உரையாடலின் போது பிரதமர் நரேந்திர மோடி இன்று உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்குவதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். மேலும் என்.சி.சி வீரர்களுடன் உரையாடியபோது, பிரதமர் மோடி, “ஒரே பாரதம், வலிமையான பாரதமே நமது நோக்கம்” என்றார்.

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேகும் என்.சி.சி வீரர்கள், என்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் மற்றும் கலைஞர்களுடனான தொடர்புக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், குடியரசு தின அணிவகுப்பு நாட்டின் சிறந்த சமூக-கலாச்சார பாரம்பரியம் மற்றும் மூலோபாய வலிமையை உலகுக்கு வெளிப்படுத்துகிறது என்றார்.

அணிவகுப்பில் பங்கேற்கும் என்.சி.சி வீரர்கள் குடியரசு தினத்திற்கு முன்னதாக புதுடெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் கிரேன் ரிஜிஜு ஆகியோர் கலந்து கொண்டனர். யாரோ ஒருவர் சொல்வதன் மூலம் இந்தியா சுயசார்பு அடையாது என்றும் அது இளைஞர்களின் செயல்களால் மட்டுமே அடையப்படும் என்று அப்போது பிரதமர் வலியுறுத்தினார்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்வந்து நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

“கொரோனா தடுப்பூசியில் நாட்டிற்கு உதவ முன்வருமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஏழைகளுக்கும் பொது மக்களுக்கும் நீங்கள் சரியான தகவல்களை வழங்க வேண்டும். தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்பும் ஒவ்வொரு அமைப்பையும் நாம் தோற்கடிக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், பிரதமர் ராஷ்டிரிய பால் புராஸ்கர் (பி.எம்.ஆர்.பி.பி) விருது பெற்றவர்களுடன் நாளை மதியம் 12 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாட உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதுமை, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம், சமூக சேவை, கல்வித்துறை, மற்றும் துணிச்சல் ஆகிய துறைகளில் சிறப்பான சாதனைகள் புரிந்த சிறுவர்களுக்கு பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புராஸ்கரின் கீழ் பால் சக்தி புராஸ்கரை இந்திய அரசு வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு, பால் சக்தி புராஸ்கரின் பல்வேறு பிரிவுகளின் கீழ் நாடு முழுவதும் இருந்து 32 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Views: - 0

0

0