கார் டிரைவருக்கு முதலாளி கொடுத்த “புதையல்“.!!
19 August 2020, 4:55 pmஆந்திரா : அன்ந்தபுரம் கருவூல ஊழியரின் கார் டிரைவர் வீட்டில் பெட்டி பெட்டியாக வெள்ளி பொருட்கள், தங்க ஆபரணங்கள், கத்தை கத்தையாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள அரசு கருவூலத்தில் சீனியர் அசிஸ்டெண்ட் ஆக வேலை செய்பவர் மனோஜ்குமார். அவருடைய கார் டிரைவர் அதே பகுதியில் உள்ள புக்கராய சமுத்திரத்தை சேர்ந்த நாகலிங்கய்யா ஆவார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அனந்தபுரம் மத்திய குற்றத்தடுப்பு போலீசாருக்கு மனோஜ் குமார், நாகலிங்கய்யா ஆகியோரின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக புகார் வந்தது.
அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் இரண்டு பேரையும் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் தாராளமாக செலவு செய்வது, விலை உயர்ந்த கார்களில் சுற்றுவது ஆகியவை தெரியவந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை போலீசார் நாகலிங்கய்யா வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த 8 டிரங்க் பெட்டிகளில் 84 கிலோ வெள்ளி பொருட்கள், இரண்டரை கிலோ தங்க ஆபரணங்கள், சுமார் 15 லட்ச ரூபாய் பணம், 27 லட்ச ரூபாய்க்கு உரிய பிராமிசரி நோட்டுகள், சொத்து பத்திரங்கள், பிக்சட் டெபாசிட் பத்திரங்கள் 49 ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதவிர விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் 7, ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் 3, சொகுசு கார்கள் 4 மற்றும் நான்கு கார்கள், டாக்டர்கள் 2 ஆகியவை இருந்தது தெரியவந்தது. அனைத்து பொருட்களையும் கைப்பற்றிய போலீசார் அவற்றை பறிமுதல் செய்து டிரைவர் நாகலிங்கய்யாவிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தன்னுடைய வீட்டில் கைப்பற்றப்பட்ட வெள்ளி பொருட்கள்,தங்க ஆபரணங்கள், பணம், பிராமிசரி நோட்டுகள், பிக்சட் டிபாசிட் பாத்திரங்கள், வாகனங்கள் ஆகிய அனைத்தும் மனோஜ்குமாருக்கு சொந்தமானது என்று தெரிவித்தார். எனவே அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.