நீரவ் மோடிக்கு மும்பையில் தயார் நிலையில் தனி சிறை..! மகாராஷ்டிரா சிறைத்துறை அதிரடி அறிவிப்பு..!

26 February 2021, 1:22 pm
arthur_road_jail_updatenews360
Quick Share

பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) ஊழல் வழக்கில் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டில் இந்தியாவில் இருந்து தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்த இங்கிலாந்து நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மும்பையின் ஆர்தர் சாலை சிறையில் நீரவ் மோடியை அடைப்பதற்காக ஒரு சிறப்பு அறை அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது என ஒரு அதிகாரி கூறினார்.

நீரவ் மோடியை மும்பைக்கு அழைத்து வந்ததும், உயர் பாதுகாப்பு கொண்ட 12-வது பாரக் எண் கொண்ட மூன்று அறைகளில் ஒன்றில் ஒன்றில் வைக்கப்படுவார் என்று சிறை அதிகாரி கூறினார்.

“நீரவ் மோடியை சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகள் முடிந்துவிட்டன. அவரை ஒப்படைக்கும்போது சிறை செல் அவருக்கு தயாராக உள்ளது” என்று அவர் கூறினார்.

முன்னதாக இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவதை எதிர்த்து, நீரவ் மோடி பிரிட்டன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நேற்று நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார். அதில் நீரவ் மோடி இந்தியாவில் குற்றம் செய்து தப்பியோடிய வழக்கில், அவர் இந்தியாவில் நியாயமான விசாரணையைப் பெற மாட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி நீரவ் மோடியின் மனுவை தள்ளுபடி செய்தார்.

நீரவ் மோடியை இந்தியா கொண்டுவர, இந்திய அரசு பிரிட்டனில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்போர் நடத்தி வந்த நிலையில், தற்போது இந்திய அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது.

49 வயதான நீரவ் மோடி, அவர் மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை காரணமாக மீண்டும் மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்டு, மார்ச் 2019’இல் கைது செய்யப்பட்டதிலிருந்து லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 3

0

0