தொடரும் மூணாறு நிலச்சரிவு சோகம்..! 51 சடலங்கள் மீட்பு…! தேடும் பணி தீவிரம்
11 August 2020, 12:17 pmதிருவனந்தபுரம்: மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.
மூணாறு அருகே பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கி 75க்கும் அதிகமான தமிழகத்தை சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதையுண்டனர். அந்த குடியிருப்பு பகுதிகளில் மொத்தம் 83 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர்களில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். முதல்கட்டமாக 43 சடலங்கள் மீட்கப்பட, எஞ்சியவர்கள் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
5வது நாளாக இன்றும் மீட்புப்பணி நீடிக்கிறது. மழை காரணமாக தேடுதல் பணியில் தொய்வு ஏற்படுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்த ஆற்றில் நடந்த தேடுதல் வேட்டையில் 3 கி.மீ. தொலைவில் மேலும் சில அழுகிய சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பின்னர் அவை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து இறந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் மண்ணுக்கடியில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் தமிழகத்தில் இருந்து மூணாறு பகுதிக்கு வருகின்றனர். அவ்வாறு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.