கேரளாவில் தொடரும் தங்கக் கடத்தல்..! வாகனத்தில் கடத்தப்பட்ட 4.3 கிலோ தங்கம் பறிமுதல்..!

7 September 2020, 12:16 pm
Kozhikode_Airport_UpdateNews360
Quick Share

கேரளாவில் சோதனையில் இருந்த வருவாய்த்துறை அதிகாரிகளை இடித்துச் சென்ற வாகனத்தைப் பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் தங்கம் கடத்தியது தெரிய வந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ராஜதந்திர லக்கேஜ்கள் மூலம், கேரளாவுக்கு கடத்தப்பட்ட தங்கத்தை திருவனந்தபுரம் விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பல கோடி மதிப்பிலான இந்த தங்கக் கடத்தல் வழக்கில் சுங்க இலாக்கா அதிகாரிகள், என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை  வருகின்றனர். கேரள அரசின் முக்கிய புள்ளிகள் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள நிலையில், தற்போது வரை இருபதுக்கும் மேற்பட்டோர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் மற்றொரு தங்கக் கடத்தல் சம்பவம் அரங்கேற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாகனங்களில் தங்கம் கடத்தப்படுவது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கோழிக்கோடு மற்றும் கொச்சி வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், கோழிக்கோடு விமான நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம், சோதனையில் இருந்த அதிகாரிகள் மீது மோதிவிட்டுச் சென்றது. இதில் வருவாய் நுண்ணறிவு இயக்குனரக அதிகாரி, புலனாய்வு அதிகாரி மற்றும் ஓட்டுநர் காயமடைந்தனர்.

இதையடுத்து மோதிச் சென்ற வாகனத்தை துரத்திப் பிடித்து சோதனை செய்ததில் 4.3 கிலோ எடை கொண்ட தங்கம் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது.

கடத்தப்பட்ட தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் வாகன ஓட்டியை கைது செய்து விசாரித்து வருவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Views: - 0

0

0