சீன முகவரிகளுடன் வரும் விதைப் பொட்டலங்கள் உயிரியல் ஆயுதமா..? மத்திய வேளாண் அமைச்சகம் எச்சரிக்கை..!

10 August 2020, 3:06 pm
Chinese_Seed_Pocket_UpdateNews360
Quick Share

சீன முகவரிகளிலிருந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பல குடிமக்களுக்கு தபால் மூலம் மர்மமான, கோரப்படாத விதை பாக்கெட்டுகள் அடையும் செய்தியைத் தொடர்ந்து மத்திய அரசின் வேளாண் அமைச்சகம், அனைத்து மாநில அரசுகள், விதை நிறுவனங்கள், சான்றிதழ் முகவர் நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாய பல்கலைக்கழகங்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

இதுபோன்ற புகார்கள் இந்தியா இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், அமைச்சகம் முன்னெச்சரிக்கையாக மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கோரப்படாத விதை பொட்டலங்கள் நாட்டின் பல்லுயிர் பெருக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்று கூறி, ஆகஸ்ட் 6’ம் தேதி அமைச்சகம், பயிர் சார்ந்த அனைத்து நிறுவனங்களையும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டது.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து இதுபோன்ற புகார்கள் அதிகரித்து வருவதை அடுத்து மத்திய அரசின் அறிவிப்பு வந்துள்ளது.

கடந்த சில மாதங்களில், இதுபோன்ற சந்தேகத்திற்குரிய ஆயிரக்கணக்கான விதை பொட்டலங்கள் குறித்த புகார்கள் உலகம் முழுவதும் இருந்து பதிவாகியுள்ளது. அமெரிக்க வேளாண்மைத் துறை (யுஎஸ்டிஏ) இதை ஒரு மோசடி மற்றும் விவசாய கடத்தல் என்று குறிப்பிடுகிறது மற்றும் கோரப்படாத விதைப் பொட்டலங்கள் உயிரியல் ஆயுதமாக இருக்கலாம் என்று தெரிவிக்கிறது.

“நிறைய விதை நிறுவனங்கள் இந்த நாடுகளுக்கு இடையில் விதை பரிமாற்றத்தை மேற்கொள்கின்றன. இதுபோன்ற விதைகள் இந்தியாவுக்குள் வந்தால், அவை திடீரென பரவக்கூடும். மேலும் நமது சூழலையும் பல்லுயிரியலையும் கெடுக்கக்கூடும். இந்த விதைகளில் வைரஸ்கள் இருந்தால், அது விலங்கையும் மனித ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம்.” என்று தெலுங்கானா மாநில விதை மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் கே. கேசவுலு கூறினார்.

இந்தியா ஒரு பெரிய நாடு என்பதால், “நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிலர் விதை பயங்கரவாதம் என்றும் மற்றவர்கள் உயிரியல் ஆயுதம் என்றும் அழைப்பதையடுத்து அனைத்து துறைமுகங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கேசவுலு மேலும் கூறினார்.

Views: - 2

0

0