ஆர்ட்டிகிள் 370’ஐ மீட்டெடுக்க கூட்டணி..! ஜம்மு காஷ்மீர் கட்சிகள் முக்கிய அறிவிப்பு..!

Author: Sekar
15 October 2020, 8:18 pm
gupkar_declaration_updatenews360
Quick Share

தேசிய மாநாட்டு (என்.சி) கட்சியின் தலைவர் பாரூக் அப்துல்லா இன்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான மெஹபூபா முப்தி, சஜ்ஜாத் லோன் மற்றும் பிற பிராந்திய குழுக்களுடன் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக ஒருங்கிணைந்து போராடுவதாக அறிவித்தார்.

“இந்த கூட்டணியை குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி என்று பெயரிட்டுள்ளோம். எங்கள் போர் ஒரு அரசியலமைப்பு யுத்தம். 2019 ஆகஸ்ட் 5’ஆம் தேதிக்கு முன்னர் அவர்கள் வைத்திருந்த உரிமைகளை இந்திய அரசு மாநில மக்களுக்குத் திருப்பித் தர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று பாரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறினார்.

குப்கர் பிரகடனம் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளை விவாதிக்க பாரூக் அப்துல்லா தனது வீட்டில் கூட்டத்தை கூட்டியிருந்தார்.

குப்கர் பிரகடனம் என்பது ஆகஸ்ட் 4, 2019 அன்று என்.சி தலைவரின் குப்கர் இல்லத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட தீர்மானமாகும். ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாகவும், அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதாகவும் மத்திய அரசு தனது முடிவை அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, ஆகஸ்ட் 4, 2019 அன்று நடந்த கூட்டத்தின் முடிவில், ஜம்மு-காஷ்மீரின் அடையாளம், சுயாட்சி மற்றும் சிறப்பு அந்தஸ்தைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் கட்சிகள் ஒற்றுமையுடன் ஒருமனதாக தீர்மானித்ததாகக் கூறியது.

கட்சிகள் இந்த ஆண்டு ஆகஸ்டில் மீண்டும் கூடி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக போராடுவதாக உறுதியளித்தன.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370’வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்து அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சந்திப்பு மெஹபூபா முப்தி தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு நடந்துள்ளது. முன்னதாக புதன்கிழமை, பாரூக் மற்றும் அவரது மகன் உமர் ஆகியோர் மெஹபூபா முப்தியை ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது சந்திப்புக்கு அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என அவர்கள் கூறியிருந்தாலும், அரசியல் நோக்கம் இருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இன்றைய சந்திப்பு அதை உறுதிப்படுத்தியுள்ளது.

Views: - 45

0

0