700 கிமீ பயணம் செய்தும் 10 நிமிடத்தில் தவறவிட்ட மாணவர்..! நீட் தேர்வுக்கு அனுமதி மறுப்பால் விரக்தி..!

14 September 2020, 12:33 pm
NEET_Checking_UpdateNews360
Quick Share

பீகாரில் இருந்து நீட் தேர்வு எழுத கொல்கத்தா சென்ற ஒரு மாணவர், 10 நிமிடங்கள் தாமதமாக வந்த காரணத்தால் தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. தர்பங்காவில் வசிக்கும் சந்தோஷ்குமார் யாதவ் 24 மணி நேரத்திற்கும் மேலாக 700 கி.மீ தூரத்தை பயணித்தார். இருப்பினும், அவர் தேர்வு மையத்தை அடைய தாமதமாகிவிட்டது. 

பீகாரின் தர்பங்காவில் வசிப்பவர் சந்தோஷ்குமார் யாதவ். இவர் நீட் தேர்வுக்காக தயாராகி வந்த நிலையில், அவருக்கு கொல்கத்தாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.

நேற்று காலை 8 மணிக்கு தர்பங்காவில் இருந்து முசாபர்பூரை அடைய சந்தோஷ் பஸ்ஸில் ஏறியுள்ளார். பின்னர் முசாபர்பூரிலிருந்து பாட்னாவுக்கு பஸ்ஸில் கிளம்பியுள்ளார். ஆனால் வழியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பாடனாவை அடைய கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் தாமதமானது.

இதையடுத்து பாட்னாவில் இரவு 9 மணிக்கு கொல்கத்தா பேருந்தில் ஏறி பயணத்தை தொடங்கிய சந்தோஷ், நேற்று மதியம் 1.06 மணிக்கு கொல்கத்தாவின் சீல்தா நிலையம் அருகே இறக்கிவிடப்பட்டுள்ளார். பின்னர்  டாக்ஸி பிடித்து 1.40 மணிக்கு தேர்வு மையத்தை அடைந்ததாக சந்தோஷ் தெரிவித்தார்.
வழியில், சந்தோஷ் இரண்டு பேருந்துகள் மாறவேண்டியிருந்தது.

கொரோனா வைரஸ் வெடித்ததை அடுத்து, நீட் தேர்வர்கள் தேர்வு மற்றும் சோதனைக்கு கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு முன்னதாக, பாதுகாப்பு மற்றும் சுகாதார சோதனைகளுக்காக தேர்வு மையத்தில் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

தனது அனுபவத்தை விவரித்த சந்தோஷ், பரீட்சை அறைக்குள் நுழைய அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் கோரியதாகவும், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டதாகவும் கூறினார்.

இந்நிலையில் ஒரு செய்தி சேனலிடம் பேசிய சந்தோஷ் “நான் ஒரு வருடத்தை இழந்தேன்.” என விரக்தியுடன் கூறினார்.

Views: - 0

0

0