இந்தியாவுடனான நீடித்த அமைதிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: பாகிஸ்தான் விருப்பம்..!!

Author: Aarthi Sivakumar
24 March 2021, 9:51 am
India_Pakistan_flags_Updatenews360
Quick Share

புதுடெல்லி: நீடித்த அமைதிக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் எல்லா பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் முதல் அரசியல் சாசனம் 1940ம் ஆண்டு, மார்ச் 23ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள், பாகிஸ்தான் தினமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலும், இந்த நாள் நேற்று கொண்டாட்டபட்டது. அப்போது பாகிஸ்தான் தூதரகத்தின் பொறுப்பு அதிகாரி அப்தாப் ஹசன் கான் பேசும்போது,

இந்த பிராந்தியத்தில் அமைதியை பராமரிப்பது அவசியம் ஆகும். பாகிஸ்தான் தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவை கடைப்பிடிக்க விரும்புகிறது. அனைத்து பிரச்சினைகளும், குறிப்பாக 70 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்டவையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்த கொண்டாட்டத்தின் மத்தியில் பாகிஸ்தான் தூதரகத்தின் பொறுப்பு அதிகாரி அப்தாப் ஹசன் கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த தருணத்தில், இந்த பிராந்தியத்தின் அமைதியும், ஸ்திரத்தன்மையும் அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்கு அவசியமானது என்பதை வலியுறுத்திக்கூற விரும்புகிறேன். பாகிஸ்தான் தனது அனைத்து அண்டை நாடுகளுடனும், குறிப்பாக இந்தியாவுடன் நல்லுறவு வைத்துக்கொள்ள விரும்புகிறது.

நீடித்த அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும், நாம் நமது இரு தரப்பு பிரச்சினைகளை, முக்கியமாக காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். இது ஐ.நா.சபையின் முன் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த மாதம் இந்தியாவும், பாகிஸ்தானும். காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை நிறுத்தம் தொடர்பாக ஏற்படுத்தி உள்ள அனைத்து ஒப்பந்தங்களையும், புரிந்துகொள்ளுதல்களையும் பின்பற்ற ஒப்புக்கொண்டன. இந்த நிலையில் தற்போது இந்தியாவும், பாகிஸ்தானும் அனைத்து பிரச்சினைகளையும் பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் தூதரகத்தின் பொறுப்பு அதிகாரி அப்தாப் ஹசன் கான் கூறி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Views: - 88

0

0