டெல்லியை உலுக்கிய கன மழை..! 12 மணி நேரத்திற்கும் மேலாக கரண்ட் கட்..! தவிப்பில் மக்கள்..!

19 August 2020, 8:11 pm
Delhi_Rains_Bus_Submerged_UpdateNews360
Quick Share

டெல்லி-என்.சி.ஆர் பிராந்தியத்தின் சில பகுதிகளில் இன்று பெய்த மழையால் குருகிராம் பகுதி பலத்த சேதத்தை எதிர்கொண்டது.

குருகிராமில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் இன்று காலை 7 மணி முதல் பல மணி நேரம் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மின்வெட்டுக்களைக் எதிர்கொண்டுள்ளனர். வெள்ளத்தால் பாதித்த பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்தில் இடையூறு ஏற்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. மோசமான பாதிப்புக்குள்ளான இடங்களில் மதன் பூரி, பல்தேவ் நகர், ஜோதி பார்க், கிருஷ்ணா காலனி, நியூ பஸ்தி, அர்ஜுன் நகர் ஆகியவை அடங்கும்.

மேலும், குருகிராமின் ஹோண்டா சௌக்கில் நீரில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலையில் மக்களுக்கு உதவ சிவில் பாதுகாப்பு குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பல பகுதிகளிலிருந்து நீர் தேக்கம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டாலும், போக்குவரத்து நிறுத்தப்படவில்லை. எனினும், போக்குவரத்து போலீசார் புல் பிரஹலாத் புரில் போக்குவரத்தை திசை திருப்பினர்.

மழைநீரில் மூழ்கிய கோல்ஃப் கோர்ஸ் சாலையில் ஒரு அண்டர்பாஸின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

பிளாக் ஜே, சாகேட்டில் ஒரு சுவர் இடிந்து விழுந்து ஏழு கார்களை சேதப்படுத்தியது. டெல்லியில் எட்டு இடங்களில் மரங்கள் விழுந்தன. தேசிய தலைநகரின் பல்வேறு பகுதிகளிலும் கட்டிடங்களின் பகுதிகள் இடிந்து விழுந்தன.

கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் நீடித்த மிதமான மழையைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்குப் பிறகு டெல்லி கடுமையான மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார். நாள் முழுவதும் டெல்லியில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று ஸ்ரீவாஸ்தவா மேலும் தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் ஆய்வகத்தில் 29.8 மிமீ மழை பதிவாகியுள்ளது, அயனகர் வானிலை நிலையத்தில் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணி முதல் 11.30 மணி வரை 63.1 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதற்கிடையில், குருகிராமில் காலை 8.30 மணி வரை 23 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 64.5 மிமீக்கு மேல் மழைப்பொழிவு கனமாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில் 15 முதல் 64.5 மிமீ வரை மிதமானதாகவும், 15 மிமீக்கு கீழே இருப்பது குறைவாகவும் கருதப்படும்.

சில மணிநேரம் பெய்த கன மழைக்கே டெல்லியின் பல பகுதிகள் மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளது பல்வேறு கவலைகளை உருவாக்கியுள்ளது.சில வருடங்களுக்கு முன்பு பெரு வெள்ளத்தை எதிர்கொண்ட சென்னை, சில வாரங்களுக்கு முன்பு வெள்ளத்தை எதிர்கொண்ட போல, டெல்லியின் நகர்ப்புறமும் மிக நெருக்கமான ஒழுங்கற்ற கட்டுமானங்களைக் கொண்டிருப்பதே இந்த சேதத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

நகர்புறக் கட்டமைப்புகளில் அதிக கவனம் செலுத்துவது நம் அனைவரின் கடமை என அவ்வப்போது கன மழை பெய்து நிரூபித்துக்கொண்டே இருந்தாலும் தற்போது வரை பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதில் அனைவரும் உடனடியாக கவனம் செலுத்துவது எதிர்காலத்தில் இது போன்ற சேதங்களை தவிர்ப்பதற்கு உதவும்.

Views: - 13

0

0