மெஹபூபா முப்தியை சந்தித்த பாரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா..! காரணம் என்ன..?

By: Sekar
14 October 2020, 5:24 pm
mehbooba_mufti_farooq_omar_updatenews360
Quick Share

மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி 14 மாத கால தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பாரூக் அப்துல்லா மற்றும் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோர் இன்று முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதல்வரை ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

முப்தி தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இன்று தனது இல்லத்தில் பி.டி.பி தலைவர்களை சந்தித்து கட்சித் தலைவர்களுடன் அடுத்த நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், பி.டி.பி தலைவர் 370’வது பிரிவை ரத்து செய்ததற்காக மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

நேற்று மாலை அவர் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் தனது முதல் அறிக்கையில், 370’வது பிரிவை ரத்து செய்வதற்கான முடிவு, அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது அவரது மனதை மிகவும் வாட்டியது என்றும், அந்த முடிவை மாற்றியமைக்க போராடுவேன் என்றும் கூறினார்.

ட்விட்டரில் பகிரப்பட்ட ஒரு ஆடியோ செய்தியில், “அந்த கருப்பு நாளில் எடுக்கப்பட்ட கறுப்பு முடிவு தடுப்புக்காவலில் என் இதயத்திலும் ஆன்மாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பெரும்பாலான மக்கள் அதே உணர்வுகளைக் கொண்டிருப்பார்கள். அந்த நாளின் அழிவு மற்றும் அவமானத்தை யாரும் மறக்க மாட்டார்கள்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் 370’வது பிரிவை ரத்து செய்தது சட்டவிரோத மற்றும் ஜனநாயக விரோத முடிவு என்று அவர் கூறினார்.

“இந்த முடிவை மாற்றியமைப்பதற்கும் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறித்த காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஒருமனதாக போராட வேண்டியிருக்கும். இது ஒரு சுலபமான காரியமாக இருக்கப்போவதில்லை, ஆனால் எங்கள் உறுதியானது எங்களுக்கு வழிகாட்டும்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் வெவ்வேறு சிறைகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி மேலும் கூறினார்.

இந்நிலையில் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் அவர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான பாரூக் அப்துல்லாவையும் அவரது மகனான உமர் அப்துல்லாவையும் தனது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ​​உமர் அப்துல்லா, 14 மாதங்களுக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்ட பின்னர் நேற்று மெஹபூபா முப்தி விடுவிக்கப்பட்டதை அடுத்து பார்க்க வந்ததாகவும், இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என்றும் கூறினார். 

Views: - 33

0

0