படைவிலகலால் ஒரு இன்ச் நிலத்தைக் கூட இழக்கவில்லை..! இந்திய ராணுவத் தலைமை தளபதி விளக்கம்..!

Author: Sekar
30 March 2021, 9:13 pm
naravane_updatenews360
Quick Share

லடாக்கில் இந்தியா-சீனா படை விலகல் குறித்து பேசிய இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவனே, லடாக்கில் இந்தியா-சீனாவின் படைவிலகல் நடவடிக்கையால் இந்தியா எந்தப் பகுதியையும் இழக்கவில்லை என்றும், எல்லை மோதல் தொடங்குவதற்கு முன்பு இருந்த நிலைமைதான் தற்போது உள்ளது என்றும் கூறினார்.

“நாங்கள் எந்தவொரு பிரதேசத்தையும் இழக்கவில்லை, இந்த முழு விஷயமும் தொடங்குவதற்கு முன்பு நாங்கள் எங்கிருந்தோமோ அங்கு தான் உள்ளோம். ஒரு அங்குல நிலம் கூட இழக்கப்படவில்லை” என்று இரு நாடுகளுக்கிடையேயான படைவிலகல் செயல்முறை குறித்து கேட்டபோது அவர் கூறினார்.

இந்தியாவும் சீனாவும் கடந்த மாதம் பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் இருந்து வீரர்கள் மற்றும் ஆயுதங்களை திரும்பப் பெறுவது குறித்து முடிவு செய்தன. கிழக்கு லடாக்கில் மீதமுள்ள பகுதிகளில் டெப்சாங், ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ரா போன்றவற்றில் படைவிலகல் செய்வதற்கான செயல்முறையைத் தொடங்க இரு நாடுகளும் விரும்புகின்றன.

பாங்கோங் ஏரி பகுதியில் வன்முறை மோதலைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே 5’ஆம் தேதி இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையிலான கடுமையான எல்லை மோதல் வெடித்தது. கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த கடுமையான போரில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து ஜூன் 15 அன்று பதற்றம் விஸ்வரூபமெடுத்தது.

வன்முறையால் நேருக்கு நேர் நீடித்த எட்டு மாத மோதல்களுக்குப் பிறகு, இந்த மோதலில் சீனா தனது நான்கு வீரர்கள் கொல்லப்பட்டதாக ஒப்புக்கொண்டது.

கடந்த மாதம் இராணுவ அளவிலான பேச்சுவார்த்தையின் 10’ஆவது சுற்றின் போது, பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்க ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா மற்றும் டெப்சாங் போன்ற பகுதிகளில் இந்தியா விரைவாக படைவிலகல் செய்ய அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

Views: - 73

0

0