தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ‘கட்’: மத்திய பிரதேசத்தில் அதிரடி உத்தரவு..!!

Author: Aarthi Sivakumar
24 June 2021, 8:30 am
Corona_Vaccine_UpdateNews360
Quick Share

போபால்: ஜூன் மாதத்துக்கான சம்பளம் போடும்போது தடுப்பூசி சான்றிதழ்களையும் கேட்டுப்பெறுங்கள் என்று மாவட்டத்தின் அனைத்து கருவூல அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸை தடுக்க தடுப்பூசிதான் ஒரேவழி என்பது அனைத்து மருத்துவ நிபுணர்களும் ஒத்துக்கொண்ட உண்மை. அதனால்தான் விரைவாகவும், அதிகபட்ச பேருக்கும் தடுப்பூசி போடுவதில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டுகின்றன.

இருப்பினும், மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியர் அஷீஷ் சிங், தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க புதிய யுக்தியை கையாண்டுள்ளார். அதாவது, அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் மாத சம்பளம் கொடுக்கப்படாது என தெரிவித்துள்ளார். வருகிற ஜூலை 31ம் தேதிக்குள் அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு அதற்கான சான்றிதழை காண்பித்தால்தான், அடுத்த மாதத்தில் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும்.

ஜூன் மாதத்துக்கான சம்பளம் போடும்போது தடுப்பூசி சான்றிதழ்களையும் கேட்டுப்பெறுங்கள் என்று மாவட்டத்தின் அனைத்து கருவூல அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மாதாந்திர சம்பளம் பெறும் ஊழியர்கள் மட்டுமின்றி, அரசின் தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் தடுப்பூசி போட்டிருக்கிறார்களா என்ற தகவலையும் சமர்ப்பிக்கும்படி பல்வேறு துறை தலைமைப் பொறுப்பில் உள்ள அனைவருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உஜ்ஜைன் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்த அரசு ஊழியர்கள் குறித்து ஆராய்ந்தபோது, அவர்கள் யாரும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கவில்லை என தெரியவந்தது. அதையடுத்தே மாவட்ட நிர்வாகம் இந்த அதிரடி முடிவுக்கு வந்திருக்கிறது.

Views: - 433

0

0